‘10 பர்சன்ட் அமைச்சர் மூர்த்தியின் கொள்ளையோ கொள்ளை..’ பத்திரப் பதிவுத் துறையில் ஊழல் என இபிஎஸ் குற்றச்சாட்டு!
‘இந்த தொகுதி மந்திரி எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியும். மேலூரில் பேசும்போதே கீழிருந்து மந்திரியைப் பற்றி பேசுங்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். பத்திரப்பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறார் என்று மக்கள் எனக்கு பாயின்ட் எடுத்துக்கொடுக்கிறார்கள்’

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் மேலூர் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தபடியாக மதுரை கிழக்குத் தொகுதியில் ஒத்தக்கடை பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார்.
“அடுத்தாண்டு தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையோடு வெல்லும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கூட்டணியை நம்புகிறீர்கள், நாங்கள் மக்களை நம்புகிறோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்ப்பானிப்பவர்கள் மக்கள்தான். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் எண்ணிவிட்டார்கள். அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மக்களுக்கு உங்கள் கட்சி மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் வீடுவீடாகக் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கிறார்கள். எந்த கட்சியாவது மக்களைக் கெஞ்சி கூத்தாடி இப்படி கேட்குமா..? அந்த அளவுக்கு திமுக படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. கட்சிக்காரர் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது. மக்கள் செல்வாக்கும் இழந்துவிட்டது.
கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம், திமுகவில் தொண்டர் இருக்கிறார்கள் என்றால் ஏன் வீடுவீடாகப் போய் உறுப்பினர்களை சேர்க்கிறீர்கள்..? மக்கள் விரும்பினால் கட்சியில் இணைவார்கள், அதுதான் இதுவரை தமிழ்நாடு நிலை. திமுகவில் தொண்டர் எண்ணிக்கை குறைந்துவிட்டது அதனால் மக்களிடம் கையெழுத்து வாங்குகிறர்கள், கையெழுத்து போடவில்லை என்றால் திட்டத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். யாரும் பயப்படாதீர்கள், அதிமுக உங்களுக்கு துணை நிற்கும்.
உரிமைத் தொகையை ஸ்டாலின் வீட்டிலிருந்து கொடுப்பதுபோல சொல்லிக்கொண்டு இருக்கிறார். இங்கிருக்கும் அமைச்சரும் சொல்லிக்கொண்டிருக்கிறார். வருமானத்தை பெருக்கிக் கொடுக்கவில்லை, கடன் வாங்கிக் கொடுக்கிறார்கள். அந்த கடனை நீங்கள்தான் கட்ட வேண்டும். அதுக்காக வரி மேல் வரி போடுவார்கள். வருமானத்தைப் பெருக்கி அதன்மூலம் திட்டங்களை செயல்படுத்தினால் நல்ல ஆட்சி எனலாம். மக்கள் பயனடைவார்கள். நீங்கள் கடன் வாங்கி மக்கள் மீது சுமையை ஏற்றுகிறீர்கள்.
தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் எங்கு கொடுத்தார்கள், அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் நடைமுறைப்படுத்தினார். இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதியைத் தளர்த்திக் கொடுக்கிறார், மக்கள் கஷ்டத்தைப் பார்த்து ஒன்றும் கொடுக்கவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால், உங்கள் வாக்குகளைப் பெற ஸ்டாலின் அரசு நாடகத்தை அரங்கேற்றுகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அந்தர்பல்டி அடித்துவிட்டனர்.
இந்த தொகுதி மந்திரி எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியும். மேலூரில் பேசும்போதே கீழிருந்து மந்திரியைப் பற்றி பேசுங்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். பத்திரப்பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறார் என்று மக்கள் எனக்கு பாயின்ட் எடுத்துக்கொடுக்கிறார்கள். ஏற்கெனவே பிராந்தி கடை மூலம் 10 ரூபாய் அமைச்சர் என்று ஒருவர் பெயர் வாங்கியிருக்கிறார், யாரென்று உங்களுக்குத் தெரியும்.
இந்த அமைச்சர் 10 பர்சென்ட் அமைச்சர், பத்திரப்பதிவு செய்தால் 10% அவருக்குப்போய் சேரவேண்டும். அப்படி சேர்ந்தால்தான் பத்திரப்பதிவு நடக்கும், இது உண்மைதானே…? ஏற்கெனவே கஷ்டத்தில்தான் வீடு, நிலத்தை விற்கிறார்கள், அப்படியிருக்கும்போது 10% கொடுத்தால் மக்கள் எப்படி வாழ முடியும்? திமுக ஆட்சி அவல ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்.
தமிழகத்தில் 582 பத்திரப்பதிவு அலுவலகம் இருக்கிறது. அதில் ஒரு வருஷத்துக்கு மேல் பத்திரப்பதிவு அலுவலர் இருந்ததே கிடையாது, ஒரு வருஷம் ஒருவர் இன்னொரு வருஷம் இன்னொருவர். இப்படி 582 பேருக்கும் டிரான்ஸ்ஃபர் போட்டு பெரிய தொகை வாங்குகிறார்கள். அதிமுக ஆட்சி வரும், கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும், அப்போது இப்படிப்பட்ட ஊழல் எல்லாம் தோண்டி எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போனமுறை போல நினைத்துவிடாதீர்கள், போனமுறை நான் 4 ஆண்டுகள் 2 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போது எங்களுக்கு இதுபோல செய்ய மனமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த அரசு மிக மிகக் கேவலமாக எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. அதிமுக அரசு அமைந்ததும் இதற்கெல்லாம் இன்றைய அமைச்சர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அதிமுக எழுச்சிப் பயணம் நடத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இங்கிருக்கும் அமைச்சர் தொந்தரவு கொடுக்கிறார். எந்த விதத்தில் நியாயம்? நானும் முதல்வராக இருந்தேன் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோதுதான் அதிக போராட்டம் நடத்தினார்கள். தடையே கிடையாது, இதுதான் ஜனநாயகம். எதிர்ப்புகளை சந்திக்க தில்லு திராணி தெம்பு வேண்டும். அதெல்லாம் இந்த முதல்வருக்கு இல்லை. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என்றாலே பர்மிஷன் கொடுப்பதில்லை, எழுச்சிப் பயணத்தில் விளம்பரத் தட்டிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
நான் 10 முறை தேர்தலில் நின்றிருக்கிறேன், அதிமுகவில் அதிக முறை தேர்தலில் நின்று சட்டமன்றம் நாடாளுமன்றம் இரண்டிலும் போட்டியிட்டுள்ளேன். எங்களிடம் உங்கள் பாட்சா பலிக்காது. அடுத்தாண்டு அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதுமட்டுமில்லை, திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. மதுரை மாநகராட்சியில் புதிய திட்டம் ஏதாவது உண்டா என்பதை இந்த தொகுதி அமைச்சர்தான் தெரிவிக்க வேண்டும்.
ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார். தொழில் முதலிட்டை ஈர்க்கப் போயிருக்கிறாராம். ஏற்கனவே நான்கு முறை போயிருக்கிறார், அங்கே போய் சைக்கிள் ஓட்டியதுதான் மிச்சம். நான்கு முறை வெளிநாடு சென்று 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறீர்கள். கொரோனா காலத்தில் கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தது அதிமுக அரசு.
ஸ்டாலின் ஜெர்மனி சென்று அங்கு 3200 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்ததாகவும் ஒப்பந்தம் போட்டதாகவும் சொல்கிறார். அவர் ஒப்பந்தம் போட்ட இரண்டு நிறுவனங்களில் ஏற்கனவே அதிமுக ஆட்சியின் மூலம் தொழில் நடந்துகொண்டு இருக்கிறது. அந்த தொழிற்சாலை விரிவுபடுத்த ஜெர்மனியில் போய் ஒப்பந்தம் போடுகிறார், என்னவொரு நாடகம் பாருங்கள். ஒன்றே ஒன்றுதான் ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள், அதுவும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதன் தொழிற்சாலை இயங்கிவருகிறது. 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரண்டு அதிமுக ஆட்சியில் இயங்கிவரும் தொழிற்சாலை, அதில் விரிவுபடுத்தவே ஒப்பந்தம். ஏதோ சொந்த வேலைக்குச் சென்றிருக்கிறார், அதை கண்டுகொள்ளத் தேவையில்லை. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதென்றால் தமிழ்நாட்டிலேயே போட்டிருக்கலாம். அந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது, இதுக்கு எதுக்கு ஜெர்மனி அழைத்து ஒப்பந்தம் போட வேண்டும்? இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்கிறது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக கூட்டணிக் கட்சிகள் எல்லாம், அதிமுக பாஜகவுக்கு அடிமையாகிவிட்டது என்று பேசுகிறார்கள். நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல. மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு, ஊழல் நிறைந்த திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்தில் ஒன்றிணைந்தோம். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?
பாஜக அதிமுகவை விழுங்கிவிடுமாம். அதிமுகவை ஒருபோதும் விழுங்க முடியாது. ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய கூட்டணிக் கட்சிகளைத்தான் நீங்கள் விழுங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். சேலத்தில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின், அப்படியென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் பாதியை ஸ்டாலின் விழுங்கிவிட்டார், அதனால்தான் அந்த வார்த்தையை சொல்கிறார். கூட்டணி கட்சிகளே உஷாராக இருந்தால் தப்புவீர்கள். இலையென்றால், திமுக விழுங்கிவிடும்.
இதே திமுக 1999 மற்றும் 2001 ஆகிய தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மத்திய அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். நீங்க பாஜகவோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் அடிமையா? கூட்டணி என்பது சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைப்பது, வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்கு அமைப்பது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு, கூட்டணி வேறு கொள்கை வேறு, கொள்கை நிலையானது. அதன்படிதான் கூட்டணி அமைத்தோம், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பது உறுதி.
இந்த ஆட்சியில் மின் கட்டணம் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். அப்போதும் கூட மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். வரி மேல் வரி போட்டு மக்கள் மீது சுமை சுமத்தியது திமுக அரசு. வீடு கட்ட வேண்டும் என்றால் பிளான் அப்ரூவலுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுவிட்டது.
கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இது பற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு யூனிட் எம்.சாண்ட் 5500 ரூபாய், ஒரு யூனிட் ஜல்லி 4500 ரூபாய், ஒரு டன் கம்பி 70 ஆயிரம் ரூபாய், ஒரு செங்கல் 10 முதல் 12 ரூபாய், சிமெண்ட் 350 ரூபாய், மரம் 200% உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடுகட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இரவில் கனவில் வேண்டுமானால் வீடுகட்டலாம். இதைக் கட்டுப்படுத்த அமைச்சர்களும் முதல்வரும் செயல்படவில்லை. இது ஒரு கையாலாகாத அரசு என்பதற்கு இதுவே உதாரணம்.
உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினீர்கள், அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். முதலீடு எவ்வளவு, அளவு எவ்வளவு, அதன் நிலை என்ன? தொழில் துவங்கப்பட்டுவிட்டதா? இதுவே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தி அதெல்லாம் இன்று நிறைவடைந்து, வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பொருளாதாரம் உயர்ந்துள்ளது. திமுக வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள்.
அதிமுக ஆட்சியின் திட்டம் தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் எல்லாம் நிறுத்திவிட்டனர். இவை எல்லாம் அதிமுக ஆட்சியில் மீண்டும் கொண்டுவரப்படும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள்.
மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். உங்களிடம் வாங்கிய மனுவெல்லாம் வடைக் கடையில் கிடக்கிறது, திருப்புவனத்தில் ஆற்றில் கிடக்கிறது. உங்கள் மனுக்கள் குப்பைக்குத்தான் போகிறது.
நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொல்லி சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் கையெழுத்து வாங்கினார்கள். அதெல்லாம் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே காற்றில் பறந்து வீணாகிவிட்டது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ரகசியம் இருக்கிறது என்றார் உதயநிதி. இதை நம்பி மாணவர்கள் 25 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு பொறுப்பு திமுகதான் ஏற்க வேண்டும். முடியும் என்றால் முடியும் என்று சொல்ல வேண்டும் முடியாது என்றாலும் சொல்லிவிட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால் முடியாது என்றுதான் நாங்கள் சொன்னோம், இருந்தபோதும் நடவடிக்கை மேற்கொண்டோம். இப்பொழுது ஸ்டாலின் சட்டமன்றத்தில் எங்களால் முடியாது என்று கைவிரித்துவிட்டார், இதைத்தானே நாங்களும் சொன்னோம். அப்புறம் எதுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்..? எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.
மதுரை கிழக்கு தொகுதியில், ஆனையூரில் இருந்து மாட்டுத்தாவனி வரை 8 கிமீ தூரம் தார்சாலை, உம்மச்சிக்குளம் ஊராட்சி முதல் மதுரை தல்லாக்குளம் அவுட்போஸ்ட் வரை 7 கிமீ தூரம் பறக்கும் பாலம் அமைக்கப்பட்டது. ஒத்தகடை பகுதியில் நான்குவழிச்சாலை அகலப்படுத்தினோம், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றினோம், மதுரை கிழக்கு தாலுகா அலுவலகம், எம்ஜிஆர் பேருந்து நிலையம் முதல் கூடல் நகர் வரை 50 கோடி மதிப்பீட்டில் சாலை போடப்பட்டது. புதூர் முதல் நத்தம் வரை 7 கிமீ பறக்கும் பாலம், என்.எஸ் பெருங்காயம் அருகில் உயர்மட்டப் பாலம் இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. திமுக அரசு கிடப்பில் போட்ட திட்டங்கள் என்னவென்றால், டைடல் பார்க் திட்டம் அறிவித்தனர், கிடப்பில் போட்டுவிட்டனர்.
மதுரையில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய சாதனை, மாநகராட்சி மக்களுக்கு நிலையான குடிநீர் வசதி செய்துகொடுக்கும் வகையில், சுமார் 1300 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இரும்பு பைப் மூலம் குழாய் அமைத்து, நகர் பகுதி முழுவதும் மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதியை செய்து கொடுத்த அரசு அதிமுக அரசு. அதையும் இன்னும் முடிக்கவில்லை. வைகையாற்றின் குறுக்கே 90 கோடியில் தடுப்பணை கட்டினோம், 400 கோடியில் வைகை ஆற்றின் இருகரையிலும் விரைவுச் சாலைகள் அமைத்தோம், 276 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம் கொடுத்தோம், குடிமராமத்துத் திட்டம் மூலம் மாடக்குளம் கன்மாய், முத்துப்பட்டி கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் தூர்வாரப்பட்டது.
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்
