TN Assembly: கருப்பு சட்டையில் ஈபிஎஸ்.. வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்.. என்ன நடக்கிறது சட்டப்பேரவையில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருப்பு சட்டையில் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளை சட்டையில் ஓ பன்னீர்செல்வமும் சட்டப்பேரவை வந்தனர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் மீது, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில் பங்கெடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்புச் சட்டையும், அவரை விமர்சிக்கும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வெண்மைநிறச்சட்டையும் அணிந்து வந்திருந்தது சட்டப்பேரவையை சுவாரஸ்யப்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை, பேரவைத் தலைவர் அப்பாவு பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கின்றனர். அதில் குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்திருந்தனர்.
பெண் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சேலை அணிந்து வந்திருந்தனர். குறிப்பாக, கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியுடன் கருத்துவேறுபாடு காரணமாக இருந்து வந்த அதிமுகவின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்தார்.