ECR Incident: மூன்று பேர் தலைமறைவு.. இளைஞர்கள் துரத்திய காரில் திமுக கொடி வந்தது எப்படி? போலீசார் விளக்கம்
ECR Incident: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை துரத்திய இளைஞர்கள் காரில் திமுக கொடி இருந்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்கள் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை மற்றொரு காரில் இருந்த நபர்கள் துரத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பெண்களை அச்சுறுத்திய இளைஞர்களின் காரில் திமுக கொடி இடம்பிடித்திருந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
திமுக கொடி பொருந்திய காரால் சர்ச்சை
கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு பெண் மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு காரில் சென்றிருந்தார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த இரண்டு கார்களில் இருந்த இளைஞர்கள் பெண்களை அச்சுறுத்துவது போல வந்ததாக கூறப்படும் நிலையில், பெண்கள் தங்கள் காரில் உடனடியாக கிளம்பியுள்ளனர். இருப்பினும் அந்த இளைஞர்கள் திமுக கொடி பொருத்திய காரில் பின் தொடர்ந்து, பெண்களை துரத்திச் சென்றுள்ளனர் என சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பெண்கள் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் கானத்தூர் காவல் நிலைய போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், தடுத்தல், மிரட்டல், சொத்தை சேதபடுத்துவது, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
