வெளியேறிய ஆளுநர்! தனது பாணியில் பதிலடி தந்த துரைமுருகன்!
இந்த நாட்டின் மீதும், தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும், இந்த பேரவையும் என்றென்றும் கொண்டு உள்ளார்கள். தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்றில் தேசிய தலைவர்கள் மீது மாறாத நன்மதிப்பை இந்த அரசு கொண்டு உள்ளது.
சபாநாயகர் படித்த ஆளுநர் உரையே சபை குறிப்புகளில் இடம்பெறும் என்ற தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வெளியேறிய ஆளுநர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இதனை அடுத்து ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம்
இதனை தொடர்ந்து பேரவையில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், 2023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 9ஆம் நாள் அன்று மாண்புமிகு ஆளுநர் பேரவையில் உரையாற்றிய போது, ஏற்கெனவே அவரால் ஒப்புவிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில், இருந்த சில பகுதிகளை வேண்டுமென்றே விடுத்தும், அச்சிடப்படாத பகுதிகளை சேர்த்தும் உரையாற்றினார்.
உயர்ந்த மரபுகள் மற்றும் மக்களாட்சி தத்துவத்தின் அடிநாதமாக விளங்கும் நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட சட்டப்பேரவையின் மாட்சியை காக்கும் வகையில் முதலமைச்சர் எழுந்து, பேரவை தலைவர் இசைவோடு தீர்மானத்தை முன் மொழிந்தது ஆளுநருக்கு புரிந்து இருக்காது.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12ஆம் நாளன்று மாண்புமிகு ஆளுநர் உரையாற்றும் போது இதே முறையை தொடர்ந்ததால் அன்றைக்கு என்னால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் பதவிக்கு உரிய மரியாதை
கலைஞர் அவர்களுக்கு ஆளுநர் பதவி மீது மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், ஆளுநர் பதவிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து கொண்டவர். கடந்த பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்காமல், ஆளுநர் உரையை தவிர்த்து மற்ற சில மாநிலங்களில் முடிவு செய்வது போல், நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கலாம். ஆனால் கலைஞரின் வழித்தடங்களை பின்பற்றி ஆட்சி செய்யும் முதலமைச்சர் அவர்கள், நாம் மரபு மீறக்கூடாது என்ற பண்போடு யோசனை வழங்கினார்கள். ஆளுநர் அவர்கள் முந்தைய ஆண்டுகளில் செய்ததை போலவே திரும்ப செய்து இருக்கிறார்கள். தற்போது ஆளுநர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படாதது தொடர்பாக ஒரு கருத்தை கூறி உள்ளார்.
ஆளுநரின் கருத்துக்கு பதில் சொல்லியாச்சு
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆளுநர் அவர்கள் இதே கருத்தை கோடிட்டு பேரவை தலைவருக்கு கடிதம் அளித்து இருந்தார். அந்த கடிதத்திற்கு அப்போதே பதிலளித்து, இந்த அவையில் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தும், உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடுவதை தெளிவாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும், மீண்டும் இன்று அதையே ஒரு பிரச்னையாக ஆளுநர் குறிப்பிட்டு அரசுக்கு அனுப்பிய உரையை படிக்காமல் சென்றுவிட்டது, அவரது உண்மையான நோக்கம் என்ன என்பதை கேள்விக்குறியாக்குகிறது.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்த நாட்டின் மீதும், தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும், இந்த பேரவையும் என்றென்றும் கொண்டு உள்ளார்கள். தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்றில் தேசிய தலைவர்கள் மீது மாறாத நன்மதிப்பை இந்த அரசு கொண்டு உள்ளது. ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அரசால் விதிகளின்படி அனுப்பிவைக்கப்பட்ட ஆளுநர் உரையை படிக்காமல் சென்றுவிட்டார். ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட உரை அவையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவில் உள்ள பிற சட்டமன்ற பேரவைகளுக்கு மட்டுமின்றி, உலக அளவில் உள்ள சட்டமன்ற பேரவைக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட மாமன்றத்தின் மரபை காக்க அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை நான் முன் மொழிகிறேன் என்றார். துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.