பயணியால் தாக்கப்பட்ட கண்டக்டர் உயிரிழப்பு..வீடு திரும்பிய துரை முருகன்! 19 மாவட்டங்களில் மழை - இன்றைய டாப் செய்திகள்
சென்னையில் பயணியால் தாக்கப்பட்ட கண்டக்டர் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு, உடல்நலம் சீராக வீடு திரும்பிய துரைமுருகன், தங்கம் விலை உயர்வு, 19 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு என தமிழ்நாட்டில் இன்றைய டாப் செய்திகளை பார்க்கலாம்

அரசியல், குற்றம், தங்கம் விலை மற்றும் வானிலை நிலவரம் உள்பட தமிழ்நாட்டின் இன்றைய டாப் செய்திகள் பற்றி பார்க்கலாம்.
கண்டக்டரை தாக்கி இறந்த விவகாரத்தில் பயணி மீது கொலை வழக்குப்பதிவு
சென்னை மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி கோவிந்தன் மீது 3 பிரிவுகளில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். போலீசார் கோவிந்தனை கொலை செய்து விசாரித்து வருகின்றனர்.
டிக்கெட் எடுக்குமாறு கூறிபோது எழுந்த வாக்குவாத்தில் கண்டக்டர், பயணி ஆகியோர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் மயங்கி விழுந்த கண்டக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ்ந்துள்ளார்.
வீடு திரும்பினார் அமைச்சர் துரை முருகன்
வேலூரிலிருந்து சென்னைக்கு புறப்பட இருந்த அமைச்சர் துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழுமையாக உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் இப்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு திரும்பியுள்ளார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 26 முதல் 30ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் இன்று, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடரும் தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து தற்போது ரூ. 58, 360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 7, 295க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது
சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை - ஆதாரங்கள் தாக்கல்
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களை இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.
அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், "கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன என்பது குறித்தும், கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதையடுத்து, அறநிலையத் துறை தரப்பு அறிக்கைக்கு பதிலளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
வருமான வரித்துறை சோதனை
பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் இளங்கோவன் தொடர்பு இடங்களில் கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடாக மாநிலம், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்பதால் ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு
ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. ஒரு ஆடு ரூ. 3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகருக்கு 500 எலெக்ட்ரிக் பேருந்துகள்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கும் 500 எலெக்ட்ரிக் பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்ந்தம், ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இஐவி 12 ரக பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை செல்லும்.
ப்ளூ பிளாக் சான்றிதழ் பெறும் மெரினா
உலக அளவில் மிக நீளமான கடற்கரையில் இரண்டாவது இடமும், இந்தியாவின் முதலிடமும் பிடித்திருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மெரினாவுக்கு ப்ளூ பிளாக் (நீலக்கொடி) சான்றிதழ் கிடைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலகத்தரம் வாய்ந்த வசதிகளை சென்னை மெரினா கடற்கரையில் ஏற்படுத்தப்பட உள்ளது.
