'வேல்முருகன் VS துரைமுருகன்!' கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா? காரசார விவாதம்! குறுக்கிட்ட முதல்வர்!
திமுகவிற்காக ரத்தம் சிந்தி, சிறை சென்ற குடும்பத்தில் இருந்து வந்தவன், நான். எனது பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி ஆகியோர் திமுகவிற்காக போராடி சிறைத் தண்டனை பெற்றவர்கள். அமைச்சர்கள் வீட்டுக்கு போனால் எனக்கு சோறு போட்டு, டீதான் கொடுக்கிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறுவது இல்லை என வேல்முருகன் வேதனை
முதலமைச்சரின் கார் வரை சென்று பேசியும், அமைச்சர்கள் எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவது கிடையாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் பேசியது சட்டப்பேரவையில் காரசார விவாதத்தை உண்டாக்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். அதில் அரசிடம் நான் உரிமையோடு முன் வைக்கும் கோரிக்கைகளை கூட இந்த அரசு நிறைவேற்றுவது கிடையாது. ஒவ்வொரு முறையும் முதலமைச்சரின் கார் வரை சென்று எனது கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சரிடம் பரிந்துரையுங்கள் என்கிறேன். ஆனால் என் கோரிக்கையை அமைச்சர்கள் யாருமே நிறைவேற்றுவது இல்லை.
என்ன பாவம் செய்தேன் நான்; திமுகவிற்காக ரத்தம் சிந்தி, சிறை சென்ற குடும்பத்தில் இருந்து வந்தவன், நான். எனது பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி ஆகியோர் திமுகவிற்காக போராடி சிறைத் தண்டனை பெற்றவர்கள். அமைச்சர்கள் வீட்டுக்கு போனால் எனக்கு சோறு போட்டு, டீதான் கொடுக்கிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறுவது இல்லை என கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், நீங்கள் பேரவைக்குள் பேசும் போது கூட்டணியில் இருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் பேரவைக்கு வெளியில் பேசும் போது எங்களுக்கு எதிராக பேசுகிறீர்கள். கூட்டணியில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெளிவாக சொல்லுங்கள் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், சென்சிட்டிவாக நான் பேசும் போது, நகைச்சுவையாக பேசி எனது கோரிக்கைகளின் வீரியத்தை துரைமுருகன் குறைத்துவிடுகிறார். எதிரணியில் இருந்த போது கூட கருணாநிதி எனது கோரிக்கையை நிறைவேற்றினார். தற்போது கூட்டணியில் இருந்தும் பயனில்லை. நானும் ஒரு காலத்தில் திமுககாரன்தான். பாமக உருவான பிறகுதான் திமுகவில் இருந்து விலகி பாமகவுக்கு சென்றேன். அதற்கு முன் திமுகவின் பேச்சாளராக இருந்தேன். அந்த உரிமையில் கேட்கிறேன் என வேல்முருகன் பேசினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனால்தான் உதயசூரியனில் நின்று நீங்கள் வெற்றி பெற்று உள்ளீர்கள் என கூறினார்.