Vengaivayal Case: ’வேங்கைவயல் வழக்கை சிபிஐயிடம் தரவே கூடாது!’ தி.க தலைவர் கி.வீரமணி திட்டவட்டம்!
தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்

வேங்கைவயல் பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிந்துள்ளது மிக நுட்பமான – மக்களிடையே பகைமையை உண்டாக்கும் பிரச்சினையை அரசியலாக்கிக் குளிர்காயக் கூடாது சி.பி.ஐ அமைப்பிடம் வழக்கை ஒப்படைக்கக் கூறுவது சரியானதல்ல என தி.க.தலைவர் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.
வேங்கைவயல் சம்பவம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலைய Cr.No.239/2022-இல் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
