’நிலத்தடி நீருக்கு வரியா?’ மத்திய அரசை விளாசும் அன்புமணி ராமதாஸ்!
”நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது”

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது.
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.