K.Anbazhagan: ‘திமுகவின் நீண்ட கால பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்’ நினைவு தினம்!
ஆம்.''ஒவ்வொரு நாளும் உறங்கப்போகும் முன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!" என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த இனமான பேராசிரியரின் நினைவு நாள் இன்று.

திராவிட முன்னேற்ற கழகத்தில் நீண்ட காலம் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர். தந்தை பெரியாரின் தொண்டன் , அறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி, கலைஞரின் கொள்கை தளபதி , தமிழக முதல்வர் மு.கஸ்டாலினின் வழிகாட்டி என்று போற்றப்படும் இனமான பேராசியர் அன்பழகனின் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்
பிறப்பு
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் காட்டூர் கிராமத்தில் எம்.கல்யாண சுந்தரம் ஸ்வர்ணாம்பாள் தம்பதிக்கு 1922 டிசம்பர் 19 ம் தேதியன்று பிறந்தார் க.அன்பழகன். இவருக்கு ராமையா என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். திராவிட இயக்கத்தில் இணைந்த பின் இவர் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
அரசியல்
மாணவப்பருவம் முதலே தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் அன்பழகன். கல்லூரிகள், பல்கலைகழகங்கள் அரசியல் பேசும் இடமாக இருந்த அன்றைய தமிழகத்தில் அண்ணாமலை பல்கலை கழகத்திற்கு அண்ணாவை அழைத்து வந்து அரசியல் வகுப்பெடுக்க வைத்தார் அன்பழகன். பின்னாட்களில் அவரே மாணவர்களிடம் பேச தொடங்கினார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த அன்பழகன் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இணைந்து செயல்பட தொடங்கினார். தன் தொடர்ந்த உழைப்பால் திராவிட இயக்க மூத்த தலைவர்களான அண்ணா, நடராஜன், மதியழகன், ஈ.வி.கே. சம்பத், நெடுஞ்சழியன் உள்ளிட்டோரின் அன்பை பெற்றார். 1957ல் எழும்பூர் தொகுதியில் நடந்த தேர்தலில் முதல் முறையாக சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அன்பழகன். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக திமுக நுழைந்த போது சட்டமன்ற குழுவின் தலைவராக அண்ணாவும் துணை தலைவராக அன்பழகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1960 களில் இந்தி எதிர்ப்பு போராட்ட குழுவில் அன்பழகனையும் அண்ணா இணைத்திருந்தார். மீண்டும் பொதுச்செயலாளரான அண்ணா நெடுஞ்செழியன், மதியழகன், ஈ.வி.கே.சம்பத், சிற்றரசு, நடராஜனோடு அன்பழகனையும் செயலாளராக நியமித்தார். இப்படியாக தொடங்கியஅரசியல் பயணத்தில் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை கல்வித் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், கலைஞர் கருணாநிதி ஐந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற 2006-2011 காலத்தில் நிதியமைச்சர், 1977-ம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் கழகத்தின் பொதுச் செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசியலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் தன் தடத்தை பதித்து சென்றார் அன்பழகன்.
அண்ணா மறைவுக்கு பின் முதல்வராக கலைஞர் கருணாநிதியின் பெயரை நாவலர் நெடுஞ்செழியன் முன்மொழிய எம்.ஜி.ஆர், மதுரை முத்துவோடு, அன்பழகனும் வழி மொழிந்தார். பின்னர் முதல்வர் கலைஞரே திமுகவின் தலைவராக கூடும் என்ற தகவல்கள் கசிந்தது.
அப்போது சென்னை நேப்பியர் பூங்காவில் நடந்த விழா ஒன்றில் பேசிய அன்பழகன் கருணாநிதியை நான் தலைவனாக ஏற்றுக்கொண்டால் என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டார் என்று பொருள் பட பேசியதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது அன்பழகனை கடுமையாக கண்டித்து பெரியார் அறிக்கை வெளியிட்டார்.
கட்சியின் அதிருப்தியாளர்கள் கட்சியிலிருந்து விலகி விடுவது நல்லது. இருக்கிற வரை கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டாக வேண்டும். இன்றைக்கு கருணாநிதியின் இடத்தில் அன்பழகன் இருந்தாலும் அவரையும் இப்படித்தான் கண்டிப்பேன் என்று சுட்டிக்காட்டியிருந்தார் பெரியார்.
இதையடுத்து கருணாநிதியின் தலைமையை ஏற்று செயல்படத் தொடங்கிய அன்பழகன் தன் வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் உடன் பயணித்தார். கலைஞரின் கல்லறை வரை நீடித்தது அவர்களின் நட்பும் அரசியலும்!
இறுதியில் உடல் நலக்குறைவால் மார்ச் 7ம் தேதி 2020ல் மறைந்தார்.
ஆம்.''ஒவ்வொரு நாளும் உறங்கப்போகும் முன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!" என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த இனமான பேராசிரியரின் நினைவு நாள் இன்று.
