Erode East: ஈரோட்டில் திமுக போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சியில் வருத்தம் இருக்கலாம்! அமைச்சர் முத்துசாமி ஓபன் டாக்!
பொதுமக்களை பட்டியில் அடைக்க முடியுமா?, தூக்கி எறிந்துவிட்டு சென்று விடுவார்கள். விருப்பப்பட்டு மக்கள் வந்தார்கள். நாங்கள் பட்டியில் அடைத்தே வைத்து இருந்தாலும், வாக்குச்சாவடியில் மக்கள் அவர்கள் விருப்பப்படியே ஓட்டுப்போடுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே நேரடியாக போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலருக்கு வருத்தம் இருக்கலாம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜனவரி 17ஆம் தேதி உடன் மனுத்தாக்கல் நிறைவடைகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுகவே இந்த முறை நேரடியாக களம் காண்கிறது. திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.
அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி!
இந்த நிலையில் ஈரோட்டில் விட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தலில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முதலமைச்சர் அவர்கள் ஈரோடு வந்த போது மக்கள் காட்டிய ஆர்வம் எழுர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தது குறித்து என்னால் ஏதும் சொல்ல முடியாது. அவர்கள் கட்சியில் உள்ள முன்னணித் தலைவர் கூடி ஒரு முடிவு செய்து உள்ளனர். அதை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது என கூறினார்.
சட்டவிதிமீறல்கள் இல்லாமல் தேர்தல் நடக்கும்!
தேர்தலில் திமுக அராஜகம் செய்யும் என எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ள விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், தேர்தலில் முறைகேடு செய்ததாக கூறும் விமர்சனத்தை நாங்கள் மறுக்கிறோம். தேர்தலில் எப்படிப்பட்ட பணியை யார் செய்தாலும், வாக்கு போடும் வாக்காளர் தனியாகத்தான் வாக்குசாவடிக்கு செல்கிறார். அவரது விருப்பப்படியே அவர் ஓட்டுப்போட முடியும். அவரது கையை பிடித்து நாங்கள் ஓட்டுப்போட முடியாது. சட்டவிதிமீறல்கள் இல்லாமல் இந்த தேர்தல் நடக்கும். சென்ற முறை ஆர்வத்தின் காரணமாக வீடுவீடாக சென்று வாக்கு கேட்டார்கள். ஆனால் வாக்குச்சாவடியில் ஒரு சிறிய பிரச்னை கூட நடக்கவில்லை.
காங்கிரஸில் வருத்தம் இருக்கலாம்!
காங்கிரஸ் கட்சி நேரடியாக போட்டியிடாது குறித்து ஒரு சிலருக்கு வருத்தம் இருக்கலாம். அதை மறுக்க முடியாது, அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே நேரத்திலே திமுக எப்படி செயல்பட்டது என்பதையும் எல்லோரும் பார்த்தார்கள். வருத்தத்தை வெளியிடக்கூடியவர்களிடம் எந்த குறையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்கள் முழுமையாக தேர்தல் வேலைகளை செய்வார்கள்.
மக்கள் விருப்பப்படிதான் வாக்கு அளிக்கின்றனர்!
எல்லோரும் கூடுவதை பட்டியில் அடைத்து வைத்தோம் என்று சொல்வீர்களா, பொதுமக்களுக்கு உள்ள விழிப்புணர்வில் பொதுமக்களை பட்டியில் அடைக்க முடியுமா?, தூக்கி எறிந்துவிட்டு சென்று விடுவார்கள். விருப்பப்பட்டு மக்கள் வந்தார்கள். நாங்கள் பட்டியில் அடைத்தே வைத்து இருந்தாலும், வாக்குச்சாவடியில் மக்கள் அவர்கள் விருப்பப்படியே ஓட்டுப்போடுகிறார்கள்.
