கீழடி ஆய்வறிக்கை: மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி மதுரையில் ஆர்பாட்டம் அறிவிப்பு!
”தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற ஜூன் 18 அன்று காலை 10 மணிக்கு மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என திமுக மாணவர் அணியின் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி அறிவித்து உள்ளார்”

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கீழடி அகழாய்வு ஆய்வு தொடர்பாக மேலும் அறிவியல் பூர்வமான தரவுகள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ”கீழடி தொடர்பாக இன்னும் அதிகமான அறிவியல் பூர்வ முடிவுகள்,கூடுதல் தரவுகள், கூடுதல் சான்றுகள் மற்றும் கூடுதல் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை. ஒரே ஒரு கண்டுபிடிப்பு வரலாற்றுப் போக்கையே மாற்றிவிடும் என்பதால், மக்கள் அதை ஒரு பிராந்தியப் பெருமையாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என கூறி இருந்தார்.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளன. இத நிலயில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற ஜூன் 18 அன்று காலை 10 மணிக்கு மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என திமுக மாணவர் அணியின் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி அறிவித்து உள்ளார்.