DMK on Vijay: 'விஜய் யாருக்காக தேர்தலில் களம் காணுகிறார் என்பது என் கேள்வி' - டி.கே.எஸ்.இளங்கோவன்
DMK on Vijay: விஜய் யாருக்காக தேர்தலில் களம் காணப்போகிறார் என்பது தான் தன் கேள்வி என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் கூறியதாவது, '' பாருங்க. அனைவருக்கும் அரசியல் கட்சி தொடங்குவதற்கு உரிமை உள்ளது. அதனால் நாங்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதைத் தடுக்கமுடியாது. நமது அரசியலமைப்புச் சட்டம் அதனை அனுமதிக்கிறது. அதனால், விஜய்யின் கட்சி தொடக்கம் பற்றி எதுவும் சொல்லமுடியாது. ஆனால் ஒரு விஷயம், ஏன் நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார். அவர் யாருக்காக தேர்தல் களத்தில் சண்டைபோடப்போகிறார் என்பது தான் என் கேள்வி. அவரது கட்சியின் கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் வெளியில் வந்தால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால், திமுகவுக்கு என்று கொள்கை உண்டு. அதற்காக நாங்கள் வேலை செய்துகொண்டு இருக்கிறோம். நாங்கள் எங்கள் கட்சி தொடங்கியதில் இருந்து கொள்கைகளைக் கொண்டிருந்தோம். அந்த கொள்கைகளை வைத்தே நிறைய விஷயங்களை சாதித்தோம். நாங்கள் பொதுமக்களை நல்ல கல்விபெற்றவர்களாகவும் நல்ல வேலையில் இருப்பவர்களாகவும் உருவாக்கியிருக்கிறோம்’’ என்றார்.
முன்னதாக, நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.