DMK MP's Meeting: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? - விபரம் இதோ!
DMK MP's Meeting: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
DMK MP's Meeting: முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விபரம் பின்வருமாறு..
6 முக்கிய தீர்மானங்கள் இதோ..
1.ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட, ஆளுநர்களுக்கு "நடத்தை விதிகள்" (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள அந்த கோரிக்கையையும் நடைபெற இருக்கும் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இந்த எம்.பி.க்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
2.மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் கொடுத்து மதுரை அரிட்டாப்ட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை தடுத்து நிறுத்தி, ஏலத்தை ரத்து செய்ய வைத்த அனைத்து மக்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
3.உருக்கு இரும்பு 5,370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகி உள்ளது என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை மத்திய அரசும் பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழ் மண்ணின் இந்த கண்டுபிடிப்பை இந்திய தேசிய காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் இக்கூட்டம், மத்திய அரசு சார்பில் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சியை முன்னெடுக்கவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்வதோடு, மத்திய அரசும், பிரதமரும் தமிழ்நாட்டின் தொன்மை பற்றிய இந்த நிகழ்வை முன்னெடுக்க வேண்டும் என இந்த எம்.பி.க்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
4.பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். யூஜிசி நெறிமுறைகளுக்கு எதிராக வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றம். மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை ஆளுநரே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 9.1.2025 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்டியுள்ள முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
5.சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்ப் சட்ட திருத்த மசோதா 2024 யை கொண்டு வந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் முறைப்படி விவாதம் நடத்தாமல் எதிர்கட்சி உறுப்பினர்களை எல்லாம் வெளியேற்றி ஆரோக்கியமான விவாதமே பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிநாதம் என்பதை மறந்து எதிர்கட்சிகள் அளித்த 44 திருத்தங்களையும் ஏற்காமல் அவசர அவசரமாக டெல்லித் தேர்தலை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்ற துடிப்பதற்கு இந்த எம்.பி.க்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
6.தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்திடவும் மத்திய பா.ஜ.க. அரசை இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்