’வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம்’ திமுக எம்.பி.செல்வகணபதி குற்றச்சாட்டு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம்’ திமுக எம்.பி.செல்வகணபதி குற்றச்சாட்டு!

’வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம்’ திமுக எம்.பி.செல்வகணபதி குற்றச்சாட்டு!

Kathiravan V HT Tamil
Published Feb 26, 2025 06:06 PM IST

4 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து வெறும் 34 தொகுதிகள் மட்டும்தான் உயரும். ஆனால் விகிதாசாரப்படி பார்த்தால் 4 வடமாநிலங்களில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட தொகுதிகள் அதிகமாகிறது.

’வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம்’ திமுக எம்.பி.செல்வகணபதி குற்றச்சாட்டு!
’வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம்’ திமுக எம்.பி.செல்வகணபதி குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சேலம்  நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி செய்தியாளர் சந்திப்பு:-

மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் சென்னையில் கூட்ட உள்ளார். மக்களவை தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கை மணியை அடித்து உள்ளார். மறுவரையறை என்பது மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு சீரமைப்பு செய்கிறார்கள். 1971ஆம் ஆண்டுக்கு பின்னால் தொகுதி மறுவரையறை 50 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

1971ஆம் ஆண்டுக்கு பின் நாட்டின் பொருளாதாரம் மக்கள் தொகை பெருக்கத்தால் மிகப்பெரும் அளவில் பாதிப்புக்குள்ளானது. இதனால் அன்றைக்கு இருந்த ஒன்றிய அரசு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வலியுறுத்தியது. இதனால் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் மக்கள் தொகை குறைப்பு மூலம் பொருளாதர வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்து உள்ளது. 

மேலும் படிக்க:- ’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

50 ஆண்டுகள் தள்ளிப்போடப்பட்டது

தென்னிந்தியாவில் உள்ள ஒன்றுபட்ட ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் தேசிய சராசரியை விட மக்கள் தொகையை குறைத்து உள்ளனர். இந்த சூழலில் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து மறுசீரமைப்பு செய்யும் போது நாட்டின் வளர்ச்சிக்காக உன்னதமான இந்த கட்டுப்பாட்டை மேற்கொண்ட தென் மாநிலங்கள் பாதிக்கும் என்பதால் 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத்தில் அன்றைய காங்கிரஸ் அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதனால் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தது. 

2002ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கலைஞர் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை ஏற்று அன்றைய வாஜ்பாய் அரசாங்கம் 84வது சட்டத்திருத்தத்தின்படி மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்தது. இதை செய்யாமல்விட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறையும். 

இழப்பை சந்திக்கும் தென் மாநிலங்கள் 

இந்த காலக்கெடு வரும் 2025ஆம் ஆண்டு உடன் நிறைவடைகிறது. 2026ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்தாக வேண்டும். இதனால் மீண்டும் ஒரு அரசமைப்பு சட்டத்திருத்தத்தை தற்போது உள்ள பாஜக அரசு செய்த்தவறினால் மிகப்பெரிய பாதிப்பை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். 

தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில்தான் செய்ய வேண்டும் என்பது அரசமைப்பு சட்டமாக உள்ளது. அரசமைப்பு திருத்த சட்டத்தை கொண்டு வரவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் 31 ஆக குறைக்கப்படும். தென் மாநிலங்களில் 130 நாடாளுமன்றத் தொகுதிகள் 103 தொகுதிகளாக குறைக்கப்பட்டுவிடும்.

குடும்பக் கட்டுப்பாட்டை செய்யாத இந்தி பேசும் மாநிலங்கள் 

ஆனால் பெரும்பாலான இந்தி பேசும் மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு முறையாக செயல்படுத்தப்படவில்லை. அரசின் கொள்கையை மதித்து நடவடிக்கை மேற்கொண்ட தென் மாநிலங்கள் பாதிப்பை சந்திக்கிறது. வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கிறது. தற்போது உள்ள உத்தரப்பிரதேசம் 11 தொகுதிகளை கூடுதலாக பெறுகிறது. மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், பீகாரில் 10 தொகுதிகள், ராஜஸ்தானில் 4 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கிறது. இந்தியாவின் பொருளாதர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மாநிலங்கள் பாதிக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் உறுதுணையாக இல்லாத, அரசின் கொள்கை முடிவை ஏற்காத மாநிலங்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெறுகிறது. 

பாஜகவை பொறுத்தவரை எதையும் வெளிப்படையாக செய்யாத அரசு. ஜம்மு காஷ்மீரை எவ்வித விவாதமும் இல்லாமல், ஒரே இரவில் யூனியன் பிரதேசங்களாக மாற்றினார்கள். வஃபு சீர்த்திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், புதியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை போன்ற பாசிச அஜெண்டாவை திணிக்கிறார்கள். 

மேலும் படிக்க:- சீமான் vs விஜயலட்சுமி: சீமானுக்கு எதிரான கருக்கலைப்பு வழக்கு! முக்கிய ஆதாரத்தை நடிகை விஜயலட்சுமி தந்ததாக தகவல்

4 மாநிலங்கள் 200 தொகுதிகள் 

இன்றைக்கு உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பதிலாக 842 என்று உயர்த்தினால் தமிழ்நாட்டுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பது சிலரின் வாதமாக உள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு 164 தொகுதிகள் கிடைக்கும். தமிழ்நாட்டுக்கு 9 அல்லது 10 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். இதில் 4 மாநிலங்களுக்கும் சேர்த்து வெறும் 34 தொகுதிகள் மட்டும்தான் உயரும். ஆனால் விகிதாசாரப்படி பார்த்தால் 4 வட மாநிலங்களில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட தொகுதிகள் அதிகமாகிறது. 

80 தொகுதிகள் உள்ள உத்தரப்பிரதேசம் 143 தொகுதிகளாக உயரும். பீகாரில் உள்ள 40 தொகுதிகள் 79 தொகுதிகளாகும், 29 தொகுதிகள் உள்ள மத்திய பிரதேசம் 50 தொகுதிகளாக மாறும். இந்த மாநிலங்கள் மட்டுமே 274 தொகுதிகளை மறுசீரமைப்பில் பெற உள்ளது. இதனால் வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம்.