தேசிய அரசியலில் திமுகவின் முகம்.. பிறந்தநாள் காணும் திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்..!
திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி இன்று (ஜனவரி 05) தனது 57-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவி்தது வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத்தலைவர், தூத்துக்குடி தொகுதி எம்.பி. என பல்வேறு அந்தஸ்தோடு வலம் வருபவர் கனிமொழி. திராவிட இயக்க கொள்கைகளின் துடிப்பான பிடிப்பில் இருந்து வந்த காரணத்தினால் ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தை கருணாநிதியைப் போலவே எழுதுவதிலும் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அனல் பறக்கும் அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும் அவற்றை எல்லாம் சாதனைகளாக மாற்றியிருக்கிறார். தற்போது தனக்கென தனி அடையாளத்தோடு வலம் வந்துகொண்டிருக்கும் கனிமொழி கருணாநிதி இன்று (ஜனவரி 05) தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணத்தில் சில சாதனைகளை பற்றி அறிவோம்.
பன்முகத் திறமை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் போலவே கனிமொழியும் பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், இலக்கியம் என பன்முகத் திறமை வாய்ந்தவர் ஆவார். இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கனிமொழி தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்தியாவில் இந்து ஆங்கில நாளேட்டிலும் சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றியிருக்கிறார்.