ஆயிரந்தான் இருந்தாலும் ரத்தத்தின் ரத்தம்தானே! எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்த திமுக அமைச்சர்!
தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக உள்ள சு.முத்துசாமி, ஏற்கெனவே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் அமைச்சராக இருந்தவர்.
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு, அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்திற்கும் ஜெயலலிதா சிலைக்கும் திமுக அமைச்சர் முத்துசாமி மலர்தூவி மரியாதை செலுத்தியது நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதே போல் தந்தை பெரியாரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகின்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வீட்டுவசதி துறை அமைச்சராக உள்ள சு.முத்துசாமி, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி முதலில் சந்தித்த முதல் பொதுத்தேர்தலான 1977ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1991 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் முத்துசாமி வெற்றி பெற்று உள்ளார். எம்ஜிஆர் அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராகவும், ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இந்தார். 2021 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் வென்று தற்போது அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவுக்கு அமைச்சர் முத்துசாமி வந்தார். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அவர், அருகே இருந்த எம்.ஜி.ஆரின் படத்திற்கும் ஜெயலலிதா சிலைக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.