தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Minister Rajakannappan Criticizes Congress Party For Running Party Only To Buy Tickets During Elections

INDIA Alliance: ’எலெக்‌ஷனில் சீட்டு வாங்கவே கட்சியை நடத்துகிறார்கள்’ காங்கிரஸை கழுவி ஊற்றிய திமுக அமைச்சர்!

Kathiravan V HT Tamil
Jan 27, 2024 10:35 AM IST

”உழைக்கனும், மக்களுக்கு நல்லது செய்யனும்னு கட்சி நடத்துறது இல்லை. அப்புறம் எலெக்‌ஷன் வந்த உடனே எட்டிப்பாக்குறது. இது மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை”

காங்கிரஸ் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
காங்கிரஸ் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் மாநிலம் முழுவதும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட உள்ளதாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதனை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரான நிதிஷ்குமார் பாஜக கூட்டணிக்கு தாவ உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

இந்த பிரச்னைகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து விரைவில் காங்கிரஸ் கட்சி உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறது என உயர்க்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜகண்ணப்பன்,

”சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறது. அதில் என்ன பிரயோஜனம். உழைக்கனும், மக்களுக்கு நல்லது செய்யனும்னு கட்சி நடத்துறது இல்லை. அப்புறம் எலெக்‌ஷன் வந்த உடனே எட்டிப்பாக்குறது. இது மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை.

இதனால்தான் பாஜக இங்கு கொஞ்சம் ஆட்டம் போடுறானே தவிர எங்களிடம் எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. பாஜகவால் தமிழ்நாட்டில் ஒன்னும் ஆட்டம் போட முடியாது”என பேசி உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

WhatsApp channel