ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை! ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு கூட்டாக பேட்டி
ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவில் உறுப்பினர் சேர்க்க நடைபெற இருக்கிறது. பெரியார், அண்ணாவை பழித்த யாரும் தமிழ்நாட்டு அரசியலில் வெல்ல முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

ஓரணயில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
சுயமரியாதை உள்ளவர்கள் கண்டிக்கிறார்கள்
அப்போது ஆர்.எஸ். பாரதி கூறியதாவது, "எங்களை விட பொதுமக்களும், தமிழ்நாடும் கொதித்து போய் உள்ளார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் தமிழ்நாட்டில் இதுவரை அரசியலில் தலையெடுத்ததாக வரலாறே இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களை பழித்து பேசியதை திமுக மட்டுமல்ல, தமிழ் உணர்வு உள்ள அத்தனைபேரும், சுயமரியாதை உள்ள அத்தனைபேரும் கண்டித்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய வாக்குகளை, அவர்கள் ஒரே மாநாட்டில் சேர்த்துள்ளார்கள். அறநிலையத்துறை நீதிக்கட்சி காலத்தில் எதற்காக தொடங்கப்பட்டது என்ற வரலாற்றை சொன்னால் நேரம் போதாது" என்றார்.