‘திமுக அரசின் விளம்பர ஸ்டண்ட்களால் பயணிகளுக்கு பாதிப்பு கூடாது’-எடப்பாடி பழனிசாமி
இது ஒரு தனிப்பட்ட தோல்வி அல்ல. ரிப்பன் வெட்டுவதற்கு முன் அந்த திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் முழுமையாக முடிந்திருக்கிறதா என்று யோசிக்க முடியாமல் குழப்ப அரசு மாடலால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத விளைவு இது.

‘திமுக அரசின் விளம்பர ஸ்டண்ட்களால் பயணிகளுக்கு பாதிப்பு கூடாது’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சோர்வடைந்த நிலையில் சிக்கித் தவித்த அவலத்தை நாம் பார்த்தோம். பேருந்துகள் வராத நிலையில், அதுபற்றிய முறையான அறிவிப்புகளும் இல்லாமல் பயணிகளிடையே குழப்பமும் தவிப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இதுதொடர்பாக அவர் டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் எதிர்க்கட்சித் தலைவர் எழுதியிருக்கும் கட்டுரையின் தமிழாக்கம்:
சொந்த ஊருக்குச் செல்லும் கனவுகளுடன் குழந்தைகள் மற்றும் சுமைகளுடன் பேருந்து நிலையத்தில் காத்துக் கிடந்தனர். அரைகுறை வசதிகள், மோசமான நிர்வாகம், நிறுத்தப்படாமல் சென்ற பேருந்துகள், கட்டுமான பணிகளால் தடைபட்ட சாலை வசதிகள், நெடுஞ்சாலையில் குவிந்த மக்கள் கூட்டம் என மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கையாலாகாத நிர்வாகத்தை மக்கள் அன்று பார்த்தார்கள்.
இது ஒரு தனிப்பட்ட தோல்வி அல்ல. ரிப்பன் வெட்டுவதற்கு முன் அந்த திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் முழுமையாக முடிந்திருக்கிறதா என்று யோசிக்க முடியாமல் குழப்ப அரசு மாடலால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத விளைவு இது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்க ஒரு புதிய பேருந்து முனையத்தை அமைக்கவேண்டும் என்று யோசித்தபோது, அதற்குரிய தேர்வாக கிளாம்பாக்கம் இருந்தது. நகரின் எல்லா இடங்களில் இருந்தும் அப்பகுதிக்கு செல்லும் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி, சுரங்கப் பாதைகள் என்று அடிப்படை வசதிகளை முடிக்காத நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வார இறுதியில் மட்டும் 6 லட்சம் பயணிகள் அந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில் பலரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும், நீண்ட தாமதத்துக்கு பிறகும் எப்படியோ அங்கிருந்து கடந்து சென்றனர். ஒரு சிலர் போக்குவரத்து வசதியைப் பெற பல கிலோமீட்டர்கள் நடந்து செல்லவேண்டி இருந்தது. ஒருசிலர் கோபத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துரதிருஷ்டவசமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற நிலைக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. நகர்ப்புற மாடலுக்கு ஒரு காலத்தில் பெருமைமிக்க உதாரணமாக இருந்த சென்னை, இப்போது தாமதமான, செயல்படுத்தப்படாத, மக்களை சென்று சேராத திட்டங்களால் வரையறுக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் போலவே தாம்பரம் பேருந்து நிலையமும் புறக்கணிக்கப்படுகிறது. புறநகர் பயணிகள், ரயில் பயணிகள் உள்ளிட்ட சுமார் 4 லட்சம் பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை தினமும் பயன்படுத்துகிறார்கள். இந்த பேருந்து நிலையத்துக்கும் முடிச்சூர் மேம்பாலத்துக்கும் இடையிலான 500 மீட்டர் சாலைப்பகுதி மிகுந்த நெரிசலுடன் இருக்கிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. நடந்து செல்பவர்களுக்கும் வசதியில்லாமல் சீரற்ற போக்குவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுரங்கப் பாதைகூட மோசமாக பராமரிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இந்த சுரங்கப் பாதை பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது. ‘தென் சென்னையின் நுழைவு வாயில்’ என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட இந்த பேருந்து நிலையம், இன்று தினந்தோறும் தன்னை நாடிவரும் லட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு சிக்கல்களைத் தருகிறது.
மோசமான திட்டமிடல் எப்படி இருக்கும் என்பதை இது களத்தில் உணர்த்துகிறது. சேவை என்ற பெயரில் மக்களுக்கு துன்பம்தான் கிடைக்கிறது.
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட பணிகள் அரசின் மிகப்பெரிய வாக்குறுதியுடன் தொடங்கப்பட்டது. போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளை இணைக்கும் வகையிலும், பல்வேறு காலநிலைகளுக்கு ஏற்ற வகையிலும் பயணிகளுக்கான போக்குவரத்தை வழங்குவதுதான் இதன் நோக்கம். ஆனால் நான்காண்டு திமுக அரசில் அதிகாரிகள் எடுத்த தவறான நடவடிக்கைகள், நிதி கிடைப்பதில் நிலவும் நிச்சயமின்மை போன்ற காரணங்களால் இந்த திட்டம் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் பங்கான 5,400 கோடி ரூபாயும், கடனாக பெறவேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாயும் நிர்வாக குழப்பங்களால் கிடைக்கப்பெறுவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. இதற்குத் தேவையான முக்கியமான சில அனுமதிகள் பெறுவதில் ஆளும்கட்சி தவறிவிட்டது.
இந்த வாரம் ராமாபுரத்தில் மெட்ரோ பணிகளின்போது மிகப்பெரிய கான்கிரீட் கர்டர் ஒன்று கீழே விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற ஒருவர் பலியானார். இச்சம்பவம் மெட்ரோ பணிகளில் அரசின் தோல்வியை நமக்கு நினைவுபடுத்துவதாக உள்ளது. இது ஒரு விபத்து அல்ல. அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட துயர சம்பவமாகும். இதுபோன்ற ஒரு துயர சம்பவம் கடந்த ஆண்டும் ஏற்பட்டது. ஆதம்பாக்கத்தில் ஏற்பட்ட அந்த சம்பவத்தில் எம்.ஆர்.டி.எஸ் திட்ட பணிகளின்போது கான்கிரீட் தூண் கீழே விழுந்தது. உள்கட்டமைப்பு வசதிக்காக பாதுகாப்பை உதாசீனப்படுத்த கூடாது.
கட்டுமானப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படாமல் உள்ளன. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலரும் வெளியேறிவிட்டனர். சுரங்கம் தோண்டும் பணிகள், நீர்க் கசிவு, மறு டெண்டர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பணிகளை முடிப்பதற்கான காலம் 2028-ம் ஆண்டுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த பணிகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள், போக்குவரத்து மாற்றங்கள், காற்றில் பறக்கும் தூசிகள் போன்றவற்றால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கான பொதுப் போக்குவரத்தும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிறந்த போக்குவரத்துக்கு பெயர்பெற்ற மாநகர போக்குவரத்து கழகம் இப்போது பழைய பேருந்துகளைக் கொண்டும், போதிய பேருந்துகள் இல்லாமலும், மக்களின் தேவையை தீர்க்க முடியாமல் திண்டாடுகிறது. சென்னை நகர மக்களின் தேவையை தீர்க்க 1,700-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் தேவைப்படுகின்றன. ஆனால் அதற்கு பதிலாக பெயரளவில் சுமார் 12 மின்சார பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. மேலும் சில மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு இறுதியில் வாங்கப்படும் என்று உறுதிமொழி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் போக்குவரத்துக்கான பேருந்துகளை புதுப்பிப்பதற்கான எந்த தொலைநோக்கு திட்டமும் இந்த அரசிடம் இல்லை.
இது வெறும் பேருந்துகள் மற்றும் பாலங்களைப் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல. சமத்துவம், வாய்ப்பு மற்றும் ஒரு விஷயம் மக்களுக்கு எந்த அளவுக்கு எட்டுகிறது என்பதைப் பற்றிய பிரச்சினையாகும். மோசமான போக்குவரத்து என்பது கல்வி, சுகாதாரம், வேலை போன்ற வசதிகள் மக்களுக்கு கிடைப்பதை தடுக்கும். இது வர்த்தகத்தை குறைப்பதுடன் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆட்சியில் இருந்த காலத்துடன் இதை ஒப்பிட்டு பாருங்கள். 2023-ம் ஆண்டில் தமிழகம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றிய தொலைநோக்கு பார்வையுடன் நாங்கள் திட்டங்களை வகுத்தோம். மோனோ ரயிலை சாத்தியப்படுத்துவதற்கான ஆய்வுகள், புறநகர் ரயில்கள் மேம்பாடு, மல்டிமாடல் ஒருங்கிணைப்பு என்று ஒரு முழுமையான உள்கட்டமைப்பு மாற்றத்துக்கான திட்டத்தை தீட்டினோம். அவை வெறும் அறிவிப்புகளாக இல்லை. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வரைபடங்களாக அவை இருந்தன.
எங்கள் நகர்ப்புற போக்குவரத்துக்கான திட்டத்தில் விரைவு பேருந்துகளுக்கான போக்குவரத்து வழித்தடங்கள், கடைசி புள்ளிகளையும் இணைக்கும் மினி பேருந்துகள், போக்குவரத்தை சார்ந்த முழுமையான வளர்ச்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. மற்றவர்களைப் போல் அல்லாமல், ரிப்பன் வெட்டுவதற்கு முன்பு ஒவ்வொரு திட்டமும் முழுமையாக தயாராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். வெற்று அறிவிப்புகளைவிட திட்டங்களை செயலாக்குவதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம்.
எதிர்பார்த்த விளைவுகளைப் பெறுவதில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தினோம். வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. ஆனால் திமுக அரசு புகழுக்காக அடித்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. ஒரு பேருந்து முனையம் என்பது திருவிழா கூட்டத்தில் இடிந்துவிழக் கூடாது. ஒரு மெட்ரோ திட்டம் என்பது 10 ஆண்டு சோதனை முயற்சியாக இருக்கக் கூடாது. மோசமாக செயல்படுத்தப்படும் விளம்பர ஸ்டண்ட்களால் பயணிகள் பாதிக்கப்பட கூடாது.
ஒரு நல்லாட்சி என்பது அதன் தொலைநோக்கு பார்வையில் இருக்கிறது. ஏழைகளுக்கு, வயதானவர்களுக்கு, பின்தங்கியவர்களுக்கு அது எப்படி சேவை செய்யப் போகிறது என்ற கேள்வியில் இருக்கிறது. போக்குவரத்தை பயணத்துக்கான ஒரு கருவியாக மட்டும் பார்க்காமல் மக்களின் கண்ணியத்துக்கான வாகனமாக பார்ப்பதில் இருக்கிறது.
இதைவிட சிறந்த வசதிகளைப் பெறும் உரிமை தமிழகத்துக்கு இருக்கிறது. பயணத்துக்கு ஏற்ற சாலைகள், பாதுகாப்பான மெட்ரோக்கள், ஏராளமான பேருந்துகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை பெறும் உரிமையும் தகுதியும் நம் மக்களுக்கு இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அதற்கான அடிப்படை பணிகளை நாங்கள் செய்து முடித்துள்ளோம். உறுதியான செயல்பாடுதான் நமக்கு தேவை. மேம்போக்கான வளர்ச்சி நமக்கு தேவையில்லை.
எதிர்காலத்துக்கான சாலையை தொலைநோக்கு பார்வையுடன்தான் வகுக்க வேண்டும், மாயையால் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.