DMK vs BJP: ’கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு அல்வா தந்த திமுகவினர்!’ ஏன் தெரியுமா?
“DMK vs BJP: ’ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிதி ZERO’ என அல்வா பொட்டலங்களில் எழுதப்பட்டு இருந்தது”

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி கொடுக்காத மத்திய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டத்தை திமுகவினர் நடத்தினர்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் கடும் வெள்ள பாதிப்புகளை சந்தித்தன. இந்த வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மத்திய அரசின் சார்பில் மத்தியக்குழு வெள்ள சேதங்களை கணக்கீடு செய்தது.
வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட இழப்பீடு வழங்கவில்லை என திமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையிலும் திமுகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை தராத மத்திய அரசை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டத்தை திமுகவினர் முன்னெடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளிடம் அல்வா பொட்டலத்தை கொடுத்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ’ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிதி ZERO’ என அல்வா பொட்டலங்களில் எழுதப்பட்டு இருந்தது.
இதே கோரிக்கையை முன் வைத்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘அமித் ஷா அண்ணாச்சி! வெள்ள நிவாரணம் எச்சாச்சி!’ என மத்திய பாஜக அரசை கண்டித்து திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பங்கீட்டை மத்திய அரசு குறைப்பதாக கூறி நேற்றைய தினம் கர்நாடக முதலமைச்சரும், இன்றைய தினம் கேரள் முதலமைச்சரும் டெல்லியில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
