’கொள்முதல் நிலையங்களில் ரூ.840 கோடி நெல் மூட்டைகள் சேதம்!’ திமுகவை விளாசும் அன்புமணி
”நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கூட ஏற்படுத்தாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது”

கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம் அடைந்ததற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் கடந்த ஐந்தாண்டுகளில் சேதமடைந்திருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கூட ஏற்படுத்தாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது.
தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 2019-20ஆம் ஆண்டில் தொடங்கி 2023-24ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தலா 1.25 லட்சம் டன் வரை நெல்/அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இவ்வாறு சேதமடைந்த நெல்/அரிசியின் மதிப்பு மட்டும் ரூ. 840 கோடி. சேதத்தின் மதிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுமையாக தெரிவிக்க வில்லை. முழுமையான பாதிப்பு தெரிய வந்தால் சேதத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.