Lok Sabha polls 2024: சிக்கல் தீர்ந்தது.. காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி..? வெளியான முக்கிய அறிவிப்பு!
Lok Sabha polls 2024: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
DMK Alliance: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழ்நாட்டிலும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், "நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று (மார்ச் 3) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசினர். அதில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி என 10 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் காங்கிரஸ் உடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக முடித்துள்ளது.
முன்னதாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடுக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இந்த கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியிருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடும் தற்போது முடிவுற்றுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இம்முறை திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்பது கவனிக்கத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்