Devar guru pooja: தங்க கவச விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய திண்டுக்கல் சீனவாசன்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவச விவகாரத்தில் அதை வங்கியில் இருந்து எடுத்துச்செல்லும் அதிகாரம் அதிமுக பொருளாளரான தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
பசும்பொன் முத்துவராமலிங்க தேவரின் பிறந்த நாள் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 2014ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் இருந்த ஜெயலலிதா, தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள வங்கியி ஒன்றில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 30ஆம் தேதி கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் வங்கியில் இருந்து எடுத்துச்சென்று விழா முடிந்ததும் அதனை பத்திரமாக மீண்டும் வங்கிக்கு கொண்டு செல்வார்.
ஆனால் தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துவிட்ட நிலையில், ஒபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவரின் பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டதாகவும் இபிஎஸ் தரப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்த தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று ஓபிஎஸ் கூறி வருவதோடு, தங்க கவச விவகாரத்தில் தனக்கே உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தேவரின் தங்க கவசத்தை வாங்க ஒபிஎஸ் - இபிஎஸ் தரப்பு இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்த விவகாரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெறும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என்று உத்தரவிட கோரி திண்டுக்கல் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது அதிமுகவில் பொருளாளராக இருக்கும் எனக்கே தேவரின் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறும் அதிகாரம் உள்ளது.
ஆனால் வங்கி அலுவலர்கள் தன்னிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். வரும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தங்க கவசத்தை பத்திரமாக எடுத்துச்செல்ல இடைக்கால உத்தரவு வழங்கவும், அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில கட்சியின் வங்கி கணக்குகளை உபயோகப்படுத்தும் அதிகாரத்தையும் வழங்க வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.
டாபிக்ஸ்