DGP About Jafar Sadiq: ’ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ!’ மனம் திறந்த டிஜிபி சங்கர் ஜிவால்!
”ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல என்றும், அது வெறும் பரிசுப்பொருள்தான் என்றும் சங்கர் ஜிவால் கூறி உள்ளார்”

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் உடன் இருக்கும் புகைப்படம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
தயாரிப்பாளராகவும், திமுக அயலக அணியில் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டது டெல்லி போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு தேங்காயில் 50 கிலோ போதைப்பொருள் தயாரிக்கும் ரசாயனத்தை வைத்து கடத்திய வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான செய்தி வெளியான உடன் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜாபர் சாதிக்கை நீக்குவதாக அக்கட்சி அறிவித்தது.
மேலும் மைலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு சீல் வைத்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் தற்போது கென்யாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் உடன் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், தாம் சென்னை மாநகர காவல் அணையராக இருந்தபோது 10 சிசிடிவி கேமிராக்களை ஜாபர் சாதிக் ஸ்பான்சர் செய்தார். போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் குற்றவாளி என்று தெரிந்தது, சிசிடிவி கேமராக்களை நிறுத்திவிட்டோம். ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல என்றும், அது வெறும் பரிசுப்பொருள்தான் என்றும் சங்கர் ஜிவால் கூறி உள்ளார்.
