Thiruparankundram: இயல்பு நிலைக்கு திரும்பியதா திருப்பரங்குன்றம்?.. மலை கோயிலுக்கு செல்ல அனுமதி உண்டா? - விபரம் இதோ!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

Thiruparankundram Issue: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சியாகவோ, இயக்கமாகவோ செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
195 பேர் மீது வழக்கு
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நேற்று அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய நிலையில் 195 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அசைவ உணவு சர்ச்சை
திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. மேலும், பிப்ரவரி 3, 4ஆம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதனால், திருப்பரங்குன்றத்துக்கு உள்ளூரில் இருந்து மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் இந்து அமைப்பினர், பாஜகவினர் வருவதைத் தடுக்க மாவட்ட எல்லைகளின் அனைத்துச் சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
144 தடை உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழங்காந்த்தம் பகுதியில் நேற்று (பிப்.04) மாலை 5 மணி முதல் 6 மணி வரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்தது. அதன்படி, நேற்று மாலை இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செவ்வாய்க்கிழமை மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்