NTK Executives Join DMK: பெரியாரை பற்றி பேசுபவர்களை இனி நீங்களே பார்த்து கொள்வீர்கள்! உதயநிதி பேச்சு!
NTK Executives Join DMK: நீங்கள் இணைவதை எதிர்க்கட்சிகள் பார்க்கும் போது, கண்டிப்பாக வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே உங்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு

NTK Executives Join DMK: பெரியாரை குறித்து விமர்சனம் செய்பவர்களை இனி நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணையும் விழா!
நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த 52 நிர்வாகிகள் உட்பட 3000 பேர் திமுகவில் இணையும் விழா திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ராஜீவ் காந்திக்கு உதயநிதி பாராட்டு!
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சகோதரர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இளைஞரணி துணை செயலாளர் ஜோயலுக்கும் பாராட்டுக்கள். சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 14 மாதங்களில் வரப்போகிறது. பொதுவாக ஆளும் கட்சியை எதிர்த்து எதிரணியினர்தான் ஒன்று சேர்வார்கள். ஆனால் இன்றைக்கு வித்தியாசமாக எதிர்க்கட்சியில் உள்ள நீங்கள் நம்முடன் இணைத்துக் கொண்டு உள்ளீர்கள்.
வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும்!
வரக்கூடிய சட்டபேரவை தேர்தல் முடிவு என்ன என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கொள்கை மற்றும் லட்சியங்களை ஏற்று திமுகவில் இணைந்து உள்ளீர்கள். நீங்கள் இணைவதை எதிர்க்கட்சிகள் பார்க்கும் போது, கண்டிப்பாக வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே உங்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் மீது விமர்சனம்!
ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டு அடையாளங்களை அழிக்கும் முயற்சி செய்து வருகிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது, சட்டப்பேரவை புறக்கணித்து செல்வதே அவரது வேலை. எந்த நேரத்திலும், எக்காலத்திலும் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று முதலமைச்சர் உறுதி கொடுத்தார். அதை செய்து காட்டி உள்ளார். பல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அவருக்கு உறுதுணையாக கழகத்தில் இணைந்து உள்ளார்கள்.
இன்னும் அழைத்து வாருங்கள்!
பெரியாரை பற்றி தூற்றுபவர்களை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்து உள்ளார். உங்கள் எழுர்ச்சியை பார்க்கும் போது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் வந்துவிட்டீர்கள், ஆனால் உங்களை போல் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு இருப்பார்கள். அவர்களிடம் எடுத்து சொல்லி அவர்களையும் கழகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
