தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

Kathiravan V HT Tamil
Published Apr 27, 2025 06:17 PM IST

இக்கூட்டத்தில் எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்களுக்கான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன்னுக்கு ரூ.33 ஆக நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் கனிமவளங்கள் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் அளித்துள்ள கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்களுக்கான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன்னுக்கு ரூ.33 ஆக நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்குவாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள்

கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம், 25.04.2025 அன்று அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி விலைகளை குறைப்பது மற்றும் சாதாரண கற்களுக்கான சீனியரேஜ் தொகையை மறுநிர்ணயம் செய்வது ஆகியவை முக்கியமாக ஆலோசிக்கப்பட்டன.

விலை குறைப்பு மற்றும் சீனியரேஜ் முடிவு

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் தற்போதைய விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டது. மேலும், சாதாரண கற்களுக்கான சீனியரேஜ் தொகை மெட்ரிக் டன்னுக்கு ரூ.33 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்பு

இக்கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ. சரவணவேல்ராஜ், கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. சின்னசாமி, சங்க உறுப்பினர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.சாண்டு விலை உயர்வு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் உயர்த்தப் பட்டுள்ளன. ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு இருந்தது.

மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு

இந்த விலை உயர்வுக்கு பாமக நிறுவனர்- தலைவரான ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே மிகவும் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கட்டுமானப் பொருள்களின் விலை 25% வரை உயர்த்தப்பட்டிருப்பதால் கட்டுமானப் பணிகள் மேலும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், கட்டுமானத் தொழிலாளர்களும் வேலை இழக்கக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது. எனவே, தமிழ்நாட்டில் கனிமங்களுக்கு உயர்த்தப்பட்ட ராயல்டியை குறைக்கவும், புதிதாக விதிக்கப்பட்ட சிறு கனிம நில வரி விதிப்பை கைவிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.