Deputy Chief Minister: ’இப்போ கிடையாது!’ உதயநிதி துணை முதல்வராவது எப்போது? ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
”உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்த செய்தியை முதலமைச்சரே வதந்தி என கூறிவிட்டாரே என இளைஞரணி வட்டாரங்களை சேர்ந்தவர்களிடம் கேட்கும்போது, ”இப்போதைக்கு இது வதந்தி என சொல்லாம், ஆனால் எப்போதும் இது வதந்தி ஆகிவிடபோவதில்லை” என நம்பிக்கை வார்த்தைகளால் சிலிர்கின்றனர் உடன்பிறப்புகள்”

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என செய்திகள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து புஸ் ஆக்கி உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2019இல் இளைஞரணி செயலாளர்
கலைஞர் கருணாநிதி உடல் நிலம் குன்றி இருந்த காலகட்டத்தில் அரசியலில் மெதுவாக தலைக்காட்டத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், அவரது மறைவுக்கு பிறகு ஆக்டீவ் அரசியலில் குதித்தார். அரசியலுக்கு முன்பாகவே நடிகர் என்ற அறிமுகம் மக்கள் மத்தியில் இருந்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் எதிரொலியாக உதயநிதி ஸ்டாலினை கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
2021இல் எம்.எல்.ஏ! 2021இல் அமைச்சர்
2021ஆம் ஆண்டு தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதிக்கு அடுத்த ஓராண்டில் அமைச்சரவையிலும் இடம்தரப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் எம்.எல்.ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என சக அமைச்சர்களே வெளிப்படையாக பேசத் தொடங்கி இருந்தனர். விரைவில் உதயநிதி அமைச்சர் பதவி ஏற்பார் என இப்போது போலவே அப்போதும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசியவிடப்பட்டது.
சேலம் இளைஞரணி மாநாடு
கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்த சேலம் இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக வேண்டும் என உடன்பிறப்புகள் பலரும் மேடையிலேயே கோரிக்கை வைக்க திட்டமிட்டிருந்தாக கூறப்படும் நிலையில் அடுத்து வந்த மழை வெள்ள பாதிப்பு இதற்கு முட்டுக்கட்டை போட்டு சென்றது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
இந்த நிலையில் மழை காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சேலம் இளைஞரணி மாநாடு சுபயோக சுபமுகூர்த்த தினமான வரும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிலோ அல்லது ஜனவரி மாத இறுதிக்குள்ளாகவோ உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என செய்திகள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ’புஸ்’ ஆக்கி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார். இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள் என கூறி உள்ளார்.
கசியவிட்டது யார்?
இது தொடர்பாக பேசும் மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர், துணை முதல்வர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவலை ஊடகங்களுக்கு கசியவிட்டதே திமுக இளைஞரணியை சேர்ந்தவர்களும், உதயநிதிக்கு நெருக்கமானவர்களும்தான் என்கின்றனர்.
ஜெட் வேக வளர்ச்சி
2019இல் இளைஞரணி செயலாளர், 2021இல் சட்டமன்ற உறுப்பினர், 2022இல் அமைச்சர் என தனது தந்தை மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகளாக படிப்படியாக அடைந்த உயரத்தை 5 ஆண்டுகள் முடிவதற்கு ஜெட் வேகத்தில் அடைந்துவிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலால் சிக்கல்
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலக்கு வந்துவிடும். ஏற்கெனவே திமுக மீது வாரிசு அரசியல் என்ற விமர்சனம் உள்ளது. தற்போது திமுகவின் எம்.பிக்களாக உள்ள பலரும் திமுக மூத்த தலைவர்களின் வாரிசுகளாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் சீட் வழங்க கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு பிறகு பட்டாபிஷேகமா?
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தந்தால், இது பாஜக-அதிமுக கட்சிகளுக்கு வாயில் அவல் போட்டது போல் ஆகிவிடும் என்பதாலும், தேர்தல் பரப்புரையில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தலாம் என்பதாலும் இளவரசரின் பட்டாபிஷேகத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என கூறி உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை காரணம் காட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்த செய்தியை முதலமைச்சரே வதந்தி என கூறிவிட்டாரே என இளைஞரணி வட்டாரங்களை சேர்ந்தவர்களிடம் கேட்கும்போது, ”இப்போதைக்கு இது வதந்தி என சொல்லாம், ஆனால் எப்போதும் இது வதந்தி ஆகிவிடபோவதில்லை” என நம்பிக்கை வார்த்தைகளால் சிலிர்கின்றனர் உடன்பிறப்புகள்.
