கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி பங்குகள் யாருக்கு? நோட்டீஸில் சொன்னது என்ன?
”தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், சன் டிவி மூலம் கலாநிதி மாறன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது”

சன் டிவி பங்கு விவகாரம் தொடர்பாக தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு, தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தி.மு.க. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு எதிராக சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் சன் தொலைக்காட்சி குழும நிறுவனங்களின் பங்குப்பிரிவு தொடர்பாக எழுப்பப்பட்டுள்ளது, இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
குற்றச்சாட்டுகளின் விவரம்
தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், சன் டிவி மூலம் கலாநிதி மாறன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கலாநிதி மாறன், சன் குழும நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலைக்கு தனக்குத்தானே ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும், இதன் மூலம் சன் குழுமத்தில் 60% உரிமையை மற்ற பங்குதாரர்களிடம் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.