Cyclone Michaung Update: ’மிக்ஜாங் புயல் தமிழ்நாட்டை நோக்கி வரும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு!’
”வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாங் புயல் தமிழ்நாட்டை நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”

வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாங் புயல் தமிழ்நாட்டை நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு சில இடங்களில் மிக கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்ட நிலையில், இது தாமதமாகி வரும் டிசம்பர் 3ஆம் தேதி மிக்ஜாங் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாங் புயல் ஆனது வங்கதேசத்தை நோக்கி நருமா அல்லது மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திராவை நோக்கி செல்லுமா என்பது உள்ளிட்ட பலகேள்விகள் இருந்த நிலையில், இந்த மிக்ஜம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 4ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
