DMK VS CPM: ’பொற்கால ஆட்சிக்கு குடைச்சல் தருகிறோம் என நினைக்கிறார்கள்!’ திமுகவை பங்கமாக கலாய்க்கும் பெ.சண்முகம்!
போராடும் உரிமையை அரசியல் சாசனம் கொடுத்து உள்ளது. திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ தருவது இல்லை. போராட்டத்தை தடுக்க ஆளும் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது. என் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போங்கள். ஆனால் போராடவே கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என பெ.சண்முகம் கேள்வி!

திமுகவின் பொற்கால ஆட்சிக்கு குடைச்சல் தர கம்யூனிஸ்ட்கள் முயல்வதாக ஆட்சியாளர்கள் நினைக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறி உள்ளார்.
இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக சேரும் முடிவு செய்த போது, பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதாவது ஒரு வேலைக்கு சென்று கொண்டே கட்சி வேலை செய்யக் கூடாதா என்று கேட்டார்கள். ’திமுக, அதிமுகவில் உள்ளவர்கள் தொழில் செய்து கொண்டே, அரசியலையும் தொழிலாக செய்து கொண்டு இருப்பார்கள்’ ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அப்படி கிடையாது. எங்களை முழு நேர ஊழியரில் இருந்து விடுவித்தால், வேறு வேலைவெட்டியே எங்களுக்கு தெரியாது. மக்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வை ஏற்படுத்தி தருவதுதான் இதில் உக்கம் தருவதாக இருக்கும்.
இளைஞர்களை கட்சியில் சேர்ப்பது தான் எதிர்காலம்!
வாச்சாத்தி சம்பவத்தில் தலையிட்டபோது, பல மிரட்டல்களை சந்தித்தேன். பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் வாச்சாத்திக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. விடுதலை படம் போன்ற படத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எடுக்க துணிச்சல் வேண்டும். இதற்காக வெற்றிமாறனை பாராட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர்கள் வருகை குறைவாக உள்ளது. இளைஞர்கள் கட்சியில் சேருவதுதான் கட்சிக்கு எதிர்காலம்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்!
முதலாளித்துவ கட்சிகளோடு, தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வோமே தவிர, அவர்களின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கொள்கைக்கு நேரெதிரானது. கேரளாவில் உள்ள கூட்டணி அரசு எங்கள் தலைமையிலான அரசு. ஆனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உடன் தொகுதி உடன்பாடே தவிர, ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது எப்போதுமே கிடையாது.
விமர்சனங்களை திமுகவால் தாங்கி கொள்ள முடியவில்லையா?
விமர்சனங்களை திமுகவால் தாங்கி கொள்ள முடியவில்லையா? என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் ஒரு தனிக்கட்சி, எங்களுக்கு என்று தனி கொள்கை உள்ளது. அவர்கள் சொல்வது கேட்பதற்கு நாங்கள் இல்லை. நாங்கள் சொல்வதை கேட்கவும் அவர்கள் இல்லை. தேர்தலில் உடன்பாடு செய்து கொண்டோம். தோழமை நட்புணர்வு தொடர்கிறது. மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கும் போது, வரவேற்று உள்ளோம். மக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் போது எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளோம்.
பொற்கால ஆட்சிக்கு குடைச்சல் தருகிறோமா?
கே.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறதா என கேள்வி எழுப்பினார். என்னவென்றால், எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி தருவது கிடையாது. போராடும் உரிமையை அரசியல் சாசனம் கொடுத்து உள்ளது. திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ தருவது இல்லை. போராட்டத்தை தடுக்க ஆளும் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது. என் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போங்கள். ஆனால் போராடவே கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. எனது குறைகள், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வழி என்ன உள்ளது. அதற்கு போராட்டம் ஒன்றுதான் வழியாக உள்ளது. ஒரு பொற்கால ஆட்சி நடக்கும் போது, இவர்கள் அநாவசியமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ? என கேள்வி எழுப்பினார்,
