DMK vs CPM: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? ஸ்டாலினை சாடும் கே.பாலகிருஷ்ணன்! பதிலடி தந்த சேகர்பாபு!
திமுக அரசு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளை பறிக்கும்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டாத அவசரநிலை பிரகடன படுத்தப்பட்டு உள்ளதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அவர், திராவிட மாடல் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு இடதுசாரி மாடல்தான் சரியாக இருக்கும். பாஜக வீழ்த்தும் போராட்டத்தில் திமுகவுடன் இணைந்து தயக்கமின்றி பணியாற்றுவோம். ஆனால் திமுக அரசு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளை பறிக்கும்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடன படுத்திவிட்டீர்களா? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது என கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
ராமதாஸ் மற்றும் அண்ணாமலை மீது விமர்சனம்
ஒரு கட்சியின் பொதுக்குழு நடக்கும் போது ஒரு தலைவர் சொல்கிறார். இது நான் உருவாக்கிய கட்சி, நான் சொல்வதைதான் அனைவரும் கேட்க வேண்டும், இல்லை என்றால் வெளியேறிவிடுங்கள் என்று பேசுகிறார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளிகள் உதிரம் சிந்தி உருவான கட்சி. ஆனால் தனிநபர்களை சார்ந்து உள்ள அரசியல் கட்சிகள் என்ன சாதிக்கபோகிறார்கள் என்று தெரியவில்லை.
அதே போல் இன்னொரு அரசியல் தலைவர் ஒருவர், தான் சவுக்கால் அடித்துக் கொள்வேன் என்கிறார். திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் அவரை செறுப்பு போடமாட்டேன் என்கிறார். நல்ல வேளை அவர் செருப்பு போடமாட்டேன் என்று அறிவித்து உள்ளார். ஒரு வேளை வேட்டி கட்டமாட்டேன் என்று சொல்லி இருந்தால் நாடு ரொம்ப விபரீதமாக சென்று இருக்கும்.
கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர்பாபு பதில்
கே.பாலகிருஷ்ணனின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பது கடந்த ஆட்சி காலத்தில் தான் நடந்தது. ஆட்டுமந்தைகள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் பா.ஜ.கவினர் அடைக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேவை என்ன என்பதை அறிந்து அது நிவர்த்தி செய்யப்படும் என கூறி உள்ளார்.