Lok Sabha election: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி? - வெளியானது முக்கிய அறிவிப்பு!
DMK, CPM: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Lok Sabha election 2024: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழ்நாட்டிலும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால், அந்தக் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வில்லை. மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மதுரையில் தற்போதைய எம்.பி சு. வெங்கடேசன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெ.சண்முகம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு இறுதியானது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப்பட்டது. தொகுதிகளின் விவரம்: 1.மதுரை 2. திண்டுக்கல்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், "தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்த முறை மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாங்கள் கோவையை விட்டுக்கொடுத்தோம், திமுகவினர் திண்டுக்கல்லை விட்டுக் கொடுத்துள்ளனர். தேர்தலுக்கு முன்னால் சிஏஏவை அமல்படுத்தி மத்திய பாஜக மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது." என்றார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதிகள் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் முத்தரசன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப்பட்டது. தொகுதிகளின் விவரம்: 1.நாகப்பட்டினம் 2. திருப்பூர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்