’2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்!’ சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்!’ சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

’2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்!’ சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

Kathiravan V HT Tamil
Published Jun 10, 2025 02:44 PM IST

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகள் மிகக் குறைவு என கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

’2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்!’ சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!
’2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்!’ சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகள் மிகக் குறைவு என கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

கடந்த கால அதிருப்தி

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 2021 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதுவரையிலான கட்சி வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது கிடையாது என தெரிவித்தார்.

ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அதிருப்தி இருந்தது, இது திருப்திகரமான நிலை அல்ல என பெ.சண்முகம் குறிப்பிட்டார்.

2021இல் தொகுதிகளை ஏற்றுக்கொண்டதற்கான காரணம்

2021 தேர்தலில் அனைவருமே உடன்பாட்டில் கையெழுத்திட்ட பிறகுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டது. பாஜக தமிழ்நாட்டில் எந்த வகையிலும் காலூன்றி விடக்கூடாது, அது வளர்வதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமைந்துவிடக்கூடாது என்ற முடிவின் அடிப்படையில்தான், குறைந்த தொகுதிகளாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் பயணிப்பது என்ற முடிவுக்கு கட்சி வந்தது என பெ.சண்முகம் கூறினார்.

2026 தேர்தல் இலக்கு

2026 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே கட்சியின் முடிவு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார். கடந்த முறை போன்று இந்த முறை இருக்காது, கூடுதல் தொகுதிகளை நிச்சயம் திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தை நிலை

திமுக தலைமைக்கு தங்களுடைய விருப்பம் ஊடகங்கள் மற்றும் பேட்டிகள் வாயிலாகச் சென்றடையும் என்றும், அவர்களது கவனத்துக்கு இது நிச்சயமாகப் போகும் என்றும் பெ.சண்முகம் கூறினார். திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், இது மிக ஆரம்பகட்ட நிலை எனவும் அவர் குறிப்பிட்டார். நேருக்கு நேர் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை, ஆனால் உரிய நேரத்தில் கூடுதல் தொகுதிகளுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.