தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Court: Madurai High Court Dismissed Sanatana Hindu Dharma Eruchi Conference-petition Rejected

Court: சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு-மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரைகிளை

Manigandan K T HT Tamil
Mar 20, 2023 03:34 PM IST

Madurai High Court Branch: இந்து மக்கள் கட்சி சார்பாக சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தது.

மதுரை ஐகோர்ட் கிளை
மதுரை ஐகோர்ட் கிளை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வருகிறார். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பாக சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முதல் நாள் கருத்தரங்கம் இரண்டாவது நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்து இருந்தோம்.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே தூத்துக்குடியில் இரண்டு நாட்கள் பேரணி கருத்தரங்கம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசும்போது இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று பேசி வருகிறார்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவும் அளித்துள்ளார். இதனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் இவர்கள் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் உள்ளது. ஆகையால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் பேரணியில் பொது கட்டத்தில் அவர்கள் இவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆதரவாக பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது. அனுமதி கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி இந்து மக்கள் கட்சி சார்பாக சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

WhatsApp channel

டாபிக்ஸ்