சனாதனத்தை போற்றி அரசு சார்பில் வைக்கப்பட்ட பதாகை! சென்னை மாநகராட்சியின் செயலால் வெடித்தது சர்ச்சை!
சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படங்கள் இடம் பெற்று உள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் சனாதன தர்மத்தை பாராட்டி உத்திரப்பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் கடும் சர்ச்சை எழுந்து உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மகாகும்ப மேளா!
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை மகா கும்பமேளா விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சுமார் 40 கோடி பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்தும் மகா கும்பமேளாவை பிரபல படுத்த அம்மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சனாதனத்தை போற்றி சென்னையில் பதாகைகள்!
சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படங்கள் இடம் பெற்று உள்ளது. மேலும் “சனாதனத்தின் அருமை, மஹா கும்ப விழாவின் பெருமை” என்ற வாசகம் விளம்பர பதாகையில் இடம் பெற்று உள்ளது. மேலும் ‘மனித சமுதாயத்தின் அற்புதமான கலாச்சாரத்தை பறைசாற்றுங்கள்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
’சதானத்தின் அருமை’ என்று குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள பதாகை சமூகவலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சனாதன எதிர்ப்பு விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் சர்ச்சை எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ’சனாதனத்தின் அருமை’ என்று குறிப்பிட்டு விளம்பர பதாகை வைக்கப்பட்ட சம்பவம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த நிலையில் மகா கும்ப மேளா நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை வைக்க அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி பரவலாக எழுந்து உள்ளது.
சனாதனம் குறித்த உதயநிதியின் சர்ச்சை!
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார். உதயநிதியின் இந்த பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்த கட்சிகள் சார்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
