EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு ஏ.கே.செல்வராஜ், ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு திருப்பூர் சி.சிவசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை மேற்பார்வையிட்டு செய்து முடிப்பதற்காக, மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதை கண்காணிப்பது மற்றும் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், ஊராட்சி, நகர வார்டு, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது முதலான பணிகளை, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக பொறுப்பாளர்களை நியமனம் செய்வதாக அறிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம்
இதில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு ஏ.கே.செல்வராஜ், ஈரோடு மாநகர் மாவட்டத்திற்உ எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு திருப்பூர் சி.சிவசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்ற மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பெயர் எந்த மாவட்டத்திலும் இடம்பெற வில்லை. அதே வேளையில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஈபிஎஸ் - செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடா?
அவிநாசி அத்திக்கடவு திட்ட பாராட்டு விழாவில், ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் இருந்ததற்கும், அதை வைக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழா குழுவினருக்கு அறிவுறுத்தாமல் இருந்தற்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்திருந்தார். அந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்த்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகின்றது.
லிஸ்டில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்கள்
இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு சி.பொன்னையன், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தம்பிதுரை, திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு செம்மலை, மதுரை மாநகர் மாவட்டத்திற்கு பா.வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு எஸ்.கோகுல இந்திரா, கரூர் மாவட்டத்திற்கு கரூர்.எம்.சின்னசாமி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வி.கருப்பசாமி பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சேவூர் ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வைகை செல்வன், பெரம்பலூர் மாவட்டத்திற்கு ப.மோகன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு ஏ.கே.செல்வராஜ், நீலகிரி மாவட்டத்திற்கு செ.ம.வேலுசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு எஸ்.வளர்மதி, தஞ்சாவூர் மேற்கு மாவட்டத்திற்கு என்.ஆர்.சிவபதி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு டி.கே.எம்.சின்னையா, வேலூர் மாநகர் மாவட்டத்திற்கு முக்கூர் என்.சுப்பிரமணியன், வேலூர் புறநகர் மாவட்டத்திற்கு செஞ்சி.ந.ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டத்திற்கு ஜி.பாஸ்கரன், சிவகாசி தெற்கு மாவட்டத்திற்கு அன்வர்ராஜா, செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு சி.த.செல்லப்பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு செ.தாமோதரன், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்திற்கு கே.டி.பச்சைமால் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
