முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டாவுக்கு அனுமதி மறுப்பு! கருப்பு நிறத்தை பார்த்து பயப்படுகிறாரா ஸ்டாலின்?
“கருப்பு கலர் துப்பட்டாவை, கருப்பு கொடி என்று நினைக்கிறார்களோ என்னவோ! கருப்பை பார்த்து ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்துவிட்டாரா? என தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்!”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்த மாணவிகளிடம் இருந்து கருப்பு நிற துப்பட்டாவை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் மாணவிகள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாவை நுழைவாயிலில் இருந்த காவலர்கள் வாங்கி வைத்தனர். மேலும் கருப்பு நிற பை மற்றும் குடை ஆகிய பொருட்களையும் வாங்கி வெளியில் பாதுகாத்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியில் வந்த பிறகு கருப்பு நிற துப்பட்டாகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருப்பு கலர் துப்பட்டாவை, கருப்பு கொடி என்று நினைக்கிறார்களோ என்னவோ! கருப்பை பார்த்து ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்துவிட்டாரா?, பெரியவர் வீரமணியிடம் இது குறித்து கருத்து கேட்க வேண்டும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதுபோல், கருப்பாக இருந்தால் கருப்பு கொடி காண்பிக்க வருகிறார்களோ என நினைத்து இருக்கலாம். ஆட்சியில் அவ்வளவு தவறுகள் நடக்கிறது. அதனால் ஆட்சியை எதிர்த்து துப்பட்டாவை கருப்பு கொடியாக காண்பித்துவிட போகிறார்களோ என பயப்படுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை”