பெருங்குடி தீ விபத்து - தீயணைப்பு வீரர்களுக்கு ஸ்டாலின் பாராட்டு!
சென்னை, பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை இரவு பகலாக அயராமல் போராடி அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை : பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கு, 225 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பங்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை இங்கு கொட்டப்பட்டு, பின்னர் மறு சுழற்சி செய்யப்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கில், தினமும் 5,000 டன்னுக்கு குறையாத குப்பைக் கழிவுகள், மாநகராட்சி லாரிகள் வாயிலாக கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றன.இவை போதிய வேகத்தில் மறுசுழற்சி செய்யப்படாததால், குப்பை இருப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனால், பல லட்சம் டன் குப்பைக் கழிவுகள் மலைபோல் தேங்கியுள்ளன.
இந்நிலையில்,இந்த கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திறந்தவெளி என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ வேகமாகப் பரவியது. 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில், 100க்கும் மேற்பட்ட லாரிகளின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, 12 தீயணைப்பு வாகனங்கள், 2 ஸ்கைலிப்ட் வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் 3 நாட்களாக தீயை அணைக்க போராடி வந்தனர்.
இதனால், இந்த பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. தீயை அணைக்க, தீயணைப்புத் துறை, மாநகராட்சி உள்ளிட்ட நான்கு துறை சார்ந்த, 300 ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டனர். இதனால் பெருங்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள துரைப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளிலும் புகை மூட்டம் சூழ்ந்தது. மூச்சுத் திணறல், கண்ணெரிச்சல் என அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதியடைந்து வந்தனர். நேற்று வரை பயங்கரமாக புகை வெளியேறிய நிலையில் தற்போது தீ முழுவதும் அணைக்கப்பட்டது.
புகை பரவாமல் தடுக்க குப்பைகள் மீது மண்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்களாக புகை மண்டலத்தில் வசித்து வந்ததால் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்” பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை இரவு பகலாக அயராமல் போராடி அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்! வருமுன் காப்பதே சிறப்பு! எனவே இனி இத்தகைய நிகழ்வு நேராமல் தடுப்பதற்குரிய வழிகளைக் காண அறிவுறுத்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.
