’பாபா படத்திற்கு எதிர்ப்பு! பேத்தி படத்திற்கு நட்பா?’ வாழ்கை ஒரு வட்டம்! விளாசும் ராமசுகந்தன்!
”வாழ்க்கை ஒரு வட்டம்.... பாபா படத்தை வெளியிடாமல் பாமகவினர் பிரச்சினை உண்டாக்கிய பொழுது தமிழ்நாட்டில் உள்ள வன்னிய தலைவர்களை சந்தித்து அப்போது திரு ரஜினிகாந்த் அவர்கள் உரையாடிய பொழுது... இன்று அதே பாமகவினர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து அவர்கள் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்தனர்”
நடிகர் ரஜினி காந்த் நடித்த பாபா திரைப்படத்தை வெளியிட, அன்று பாமக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்து உள்ள, ’அலங்கு’ திரைப்பட முன்னோட்டத்தை நடிகர் ரஜினி காந்த் வெளிட்டு உள்ளார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன், ‘வாழ்கை ஒரு வட்டம்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த, பாபா திரைப்படம் வெளியானது. அப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மது மற்றும் சிகரெட் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த காட்சிகளை நீக்கம் செய்யக் கோரி பாமக எதிர்ப்பு தெரிவித்தது. அப்படம் வெளியான திரையரங்குகள் முன் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மோதல் உண்டானது. இதன் எதிரொலியாக பாபா படத்தின் படப்பெட்டிகளும் கடத்தப்பட்டன.
பாமகவினரின் இந்த செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்களுக்கு எதிராக, வேலை செய்ய ரசிகர்களுக்கு ரஜினி காந்த் உத்தரவிட்டார். அது முதல் பாமக மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே பிரச்னைகள் இருந்து வந்தது.
இந்த நிலையில், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில், நேற்று மாலை நடிகர் ரஜினி காந்தை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் தயாரித்து உள்ள, அலங்கு திரைப்படத்தின் முன்னோட்ட்டக் காட்சிகள் ரஜினிக்கு காட்டப்பட்டது. படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நடிகர் ரஜினி காந்தை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவின. இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில்,
”வாழ்க்கை ஒரு வட்டம்.... பாபா படத்தை வெளியிடாமல் பாமகவினர் பிரச்சினை உண்டாக்கிய பொழுது தமிழ்நாட்டில் உள்ள வன்னிய தலைவர்களை சந்தித்து அப்போது திரு ரஜினிகாந்த் அவர்கள் உரையாடிய பொழுது... இன்று அதே பாமகவினர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து அவர்கள் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்தனர்....” என பதிவிட்டு உள்ளார்.