Erode East By-Election: ’ஈரோடு கிழக்கில் சீமானை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்போம்!’ காங்கிரஸ் அறிவிப்பு!
Erode East By-Election: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என மக்கள் ராஜன் பேட்டி

2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் திமுக ஒதுக்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மக்கள் ராஜன் செய்தியாளர் சந்திப்பு
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி மக்கள் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நானும், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, சஞ்சய் சம்பத், முத்துக்குமார், ஆர்.எம்.பழனிசாமி உள்ளிட்டோர் கேட்டு இருந்தோம். ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிதான், மீண்டும் நாமே போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார். ஆனால், ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதால், திமுகவுக்காக காங்கிரஸ் விட்டுக் கொடுத்து உள்ளது. தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்ய தயாராக உள்ளோம்.
ஈபிஎஸ்க்கு தோல்வி பயம்!
தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் இருந்த நிலையில், பின்னர் தலைமையின் அறிவிப்பு கவலையை தந்தது. ஆனால் உங்களை கட்சி கைவிடாது என்று செல்வப்பெருந்தகை கூறினார். ஈரோடு கிழக்கில் போட்டியிடும் சந்திரக்குமாருக்கு ஆதரவாக உழைத்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்வோம். தோற்றுவிடுவோம் என்பதால்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணித்து உள்ளார். திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்வோம்.
2026இல் ஈரோடு கிழக்கு வேண்டும்!
மாவட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தனிப்பட்ட முறையில் நான் உட்பட பலரும் சீட் கேட்டு இருந்தோம். எனது கருத்தை அழுத்தமாக எடுத்து வைத்தேன். ஆனால் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்பதால், அவருக்கு அந்த வாய்ப்பு கொடுத்தார்கள். இந்த முறை எனக்கு வாய்ப்பு மறுக்கவில்லை. திமுகவுக்கு தொகுதி வழங்கப்பட்டு உள்ளது. பெரியாரை பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமானை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்போம்.
