தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Congress Announced Evks Elangovan As Candidate For Erode East Bypoll

Erode East bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்!

Karthikeyan S HT Tamil
Jan 22, 2023 07:31 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4 ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனிடையே, திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

காங்கிரஸ் அறிக்கை
காங்கிரஸ் அறிக்கை

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் (ஈவிகேஎஸ் இளைய மகன்) விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில், அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் மற்றும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனுவினை அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா.வின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்