உள்ளாட்சி அமைப்பில் மாற்றம்.. மாநகராட்சி.. நகராட்சி.. பேரூராட்சி ஆகும் பகுதிகளின் பட்டியல்!
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக ஐந்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புரங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின் பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன.
மறுசீரமைப்பு அவசியம் ஏன்?
இப்பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. இதன் மூலம் தொடர்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
