’சாட்டையால் அடிக்கும் டெக்னிக்கை அண்ணாமலைக்கு முன்பே யோசித்து விட்டேன்!’ கூல் சுரேஷ் ஆவேச பேட்டி!
அண்ணாமலை சார், தமிழ்நாட்டுக்காக போராடி வருகிறார். கூல் சுரேஷ் தமிழ் சினிமாவுக்காக போராடி வருகிறேன் என நடிகர் கூல் சுரேஷ் கூறி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று மாலை மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்த சம்பவம் நடந்த அதே நாளில், நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷும் தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் காணொலிகள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின.
கூல் சுரேஷ் மனம் திறந்த பேட்டி
இந்த நிலையில் இது தொடர்பாக கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் மனம் திறந்து உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மீது பாசம் உள்ளவர்கள். தயவு செய்து எங்கள் நட்பை பிரித்துவிடாதீர்கள். அவர் என்னை பார்த்தாலும், நான் அவரை பார்த்தாலும் கட்டிப்பிடித்துக் கொண்டு என்னிடம் பேசுவார். அந்த அளவுக்கு என்மீது பாசம் கொண்டவர்.
உங்கள் போதைக்கு என்னை ஊறுகாய் ஆக்கிவிடாதீர்கள். அரசியலில் அவருடன் மோத வேண்டும் எனில் நேரடியாக மோதுங்கள். என்னை பகடைகாயாக பயன்படுத்த வேண்டாம்.
அவரு மல! நான் கூலு…!
அவரு வந்து மலை…! அண்ணாமலை..!, ஆனா நான் சாதாரண கூல். நான் சாட்டை அடிப்பதை மட்டும் கட் செய்து மீம்ஸ் போட்டுவிட்டனர். அண்ணாமலை சார், தமிழ்நாட்டுக்காக போராடி வருகிறார். கூல் சுரேஷ் தமிழ் சினிமாவுக்காக போராடி வருகிறேன்.
நான் சாட்டை அடித்துக் கொள்ளும் நிகழ்வை முன் கூட்டியே திட்டமிட்டுவிட்டேன், இதற்கும் அண்ணாமலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அண்ணாமலை அவர்கள் சாமியிடம் சென்று போராடுகிறார். அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவது கஷ்டமாக உள்ளது. சில பாஜக நண்பர்கள் எனக்கு ரசிகர்களாக உள்ளனர்.
பாஜக உடன் கூட்டணிக்கு ரெடி
வரும் 2026ஆம் ஆண்டு பாஜக உடன் கூல் சுரேஷ் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டுக்கு நல்ல விஷயங்களை செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
அண்ணாமலை அவர்கள் நான் மதிக்கும் தலைவர். அவருடனான நட்பை பிரித்துவிட வேண்டாம். விஜய் அவர்கள் ஆளுநரை சந்தித்தார். ஆனால் ஆளுநரை விட பெரிய பவரில் உள்ள மீடியாக்களை நான் தினமும் சந்தித்து வருகிறேன்.