'சர்வாதிகாரியாக மாறும் ஆவின், ஹிட்லரான கோவை ஆட்சியர்' கதறும் பால் விற்பனையாளர்கள்!
பால் முகவர்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பெறுவதற்கும், பொதுமக்கள் மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெறுவதற்கும் இணையவழி மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்கிற சர்வாதிகார உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

பால் முகவர்கள் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெறுவதற்கும் இணையவழி மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்கிற உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பால் கொள்முதலை அதிகரித்து, பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை கூடுதலாக்கி விற்பனையை உயர்த்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கார்ப்பரேட், தனியார் பால் நிறுவனங்களை விட மோசமான, ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரி போல் மாறி வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
குறிப்பாக வரும் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் பால் முகவர்களும், பொதுமக்களும் ஆவினில் ரொக்க பணபரிவர்த்தனை செய்து பால், பால் பொருட்களை வாங்கிட அனுமதியில்லை எனவும், இணையவழி மூலம் பணம் செலுத்துவோருக்கு மட்டுமே ஆவின் பால், பால் உபபொருட்கள் வழங்கப்படும், மாதாந்திர அட்டை மூலம் பால் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியரும், கோவை மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் அவர்கள் உத்தரவிட்டிருப்பது பால் முகவர்களையும், பொதுமக்களையும் வலுக்கட்டாயமாக தனியார் பால் நிறுவனங்களை நோக்கி துரத்தும் செயலாகும் என்பதால் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.