Delimitation: ’சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்’ கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!
”2 ஆண்டுகாலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதனால் நீதிக்கான அவர்கள் குரல்கள் புறக்கணிக்கப்படுகிறது. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறைவது, அல்லது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நமது அரசியல் வலிமை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும்”

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொடங்கி உள்ளது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.
அத்தனை பேருக்கும் நன்றி
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்து இருப்பது இக்கூட்டத்தில் மாபெரும் சிறப்பு. எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து உள்ளீர்கள்.