”எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ”எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Kathiravan V HT Tamil
Published Jun 22, 2025 08:27 AM IST

”மாற்றுத்திறனாளிகள் எப்போதும் கலைஞரின் உள்ளத்தில் நிறைந்தவர்கள் என்று கூறிய முதலமைச்சர், "நான் உங்களில் ஒருவன்" என்று உரிமையுடன் தெரிவித்தார்”

”எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
”எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பிலான நன்றி பாராட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

உணர்ச்சிபூர்வமான தருணம்

"இன்று எனக்கு உணர்ச்சிபூர்வமான நாள். இந்த விழா மட்டுமல்ல, வள்ளுவர் கோட்டம் என்ற இடமும் என்னை உணர்ச்சிவசப்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை உங்களுக்கு அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இந்த புனிதமான இடத்தில் உங்களுடன் இணைந்து இந்த பாராட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன்," என்று முதலமைச்சர் உருக்கமாக தெரிவித்தார்.

திருவள்ளுவரும் கலைஞரும்

தலைவர் கலைஞர் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் மீது தீராக் காதல் கொண்டவர் என்பதை நினைவுகூர்ந்த முதலமைச்சர், கலைஞர் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அரசு கட்டடங்களிலும் பேருந்துகளிலும் திருக்குறளை பொறித்தவர் என்றார். 1971-ல் திருவள்ளுவர் ஆண்டை அரசாணையாக வெளியிட்டவர், குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைத்தவர், 1974-ல் வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியவர் என கலைஞரின் பங்களிப்புகளை பெருமையுடன் எடுத்துரைத்தார்.

வள்ளுவர் கோட்டத்தின் புதுப்பொலிவு

வள்ளுவர் கோட்டத்தை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்ததை குறிப்பிட்ட முதலமைச்சர், தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிக்காமல் விட்டுவிடுவதாக விமர்சித்தார். இந்த கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ.வேலுவை மனதார பாராட்டினார். 1,400 பேர் அமரக்கூடிய மாபெரும் கூட்ட அரங்கத்துடன் சென்னையின் மைய மண்டபமாக விளங்கும் இந்த கோட்டத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பங்களிப்பு

மாற்றுத்திறனாளிகள் எப்போதும் கலைஞரின் உள்ளத்தில் நிறைந்தவர்கள் என்று கூறிய முதலமைச்சர், "நான் உங்களில் ஒருவன்" என்று உரிமையுடன் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுப்பினர் பதவி வழங்கி சமூகநீதியை நிலைநாட்டியதற்கு நன்றி தெரிவித்த அவர், இதன் மூலம் 13,357 மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்றார். தற்போது நகர்ப்புறத்தில் 650 பேரும், ஊரகத்தில் 2,984 பேரும் நியமிக்கப்படுவர். ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு மூலம் பரிசீலிக்கப்படும். நியமிக்கப்படும் உறுப்பினர்கள் மன்ற கூட்டங்களில் பங்கேற்கவும், மதிப்பூதியம் பெறவும், கடமைகளை ஆற்றவும் உரிமை பெறுவர்.

திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சி என்பது சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை காக்கும் அரசு என்று விளக்கிய முதலமைச்சர், இது ஏழை, ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநர் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கியது என்றார். "இது அரசியலுக்காக அல்ல, உள்ளார்ந்த அன்புடன் செய்யப்படுகிறது," என்று உறுதியளித்தார்.

சிறுமலர் பள்ளி நினைவு

தனது பிறந்தநாளில் சிறுமலர் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் இருப்பதே மனநிறைவை தருவதாக கூறிய முதலமைச்சர், 1984 முதல் 42 ஆண்டுகளாக இந்த பயணம் தொடர்வதாக உருக்கமாக பகிர்ந்தார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட கலைஞர் வழியில் தொடர்ந்து செயல்படுவதாக உறுதி அளித்தார்.

சாதனைகள் மற்றும் கோரிக்கைகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக தி.மு.க. ஆட்சியில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதை பேராசிரியர் தீபக் நாதன் புத்தகமாக தொகுத்து வழங்கியதை நினைவுகூர்ந்தார். மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "முயற்சி திருவினை ஆக்கும்" என்ற வள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி, மாற்றுத்திறனாளிகளின் வெற்றிகளை பாராட்டினார்.

வகுப்புவாத சக்திகளுக்கு பதிலடி

"எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை. சமூகநீதியையும் சமத்துவத்தையும் விரும்பாதவர்கள் தி.மு.க. அரசு மீது பாய்கிறார்கள். ஆனால், மக்களின் அன்பும் உங்களின் ஆதரவும் இதை முறியடிக்கும் வலிமை தருகிறது," என்று முதலமைச்சர் தெரிவித்தார். "வள்ளுவம் வாழ்வியல் நெறியாக மாறட்டும்! சமுதாயம் குறள் சமுதாயமாக மலரட்டும்!" என்று கூறி, இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் உரையை நிறைவு செய்தார்.