நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - முதலமைச்சர்
நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவியேற்றபோதே நான் சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’என்று தான் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டுக்காக உழைப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் மகன் வினோத்குமார் - ரேவதி ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்திவைத்து மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், " ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு, எனவே அந்த உணர்வோடுதான் இந்த மேடையில் வாழ்த்தி உரையாற்றிய நம்முடைய அன்பிற்கினிய சகோதரர் தொல்.திருமாவளவன், மதிப்பிற்குரிய பீட்டர் அல்போன்ஸ், வேல்முருகன், அதேபோல மற்றவர்களும் இங்கே பேசுகிறபோது இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவைகள் எல்லாம் நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்று என்னைப் பார்த்து எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
நிச்சயமாக உறுதியாக கலைஞர் அவர்களுடைய வழியில் நின்று, அவர் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ எதை எதை சாதித்துக் காட்டியிருக்கிறாரோ அதையெல்லாம் அவர் வழி நின்று நானும் சாதிப்பேன் என்ற அந்த நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதலமைச்சர் - இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசிய செய்திகளையெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்னால் பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள்.
அதையடுத்து அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் பயணம் சென்று, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினைகளை எல்லாம் பிரதமர் இடத்தில் அதற்குரிய - அமைச்சர்களிடத்தில் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம். அதையெல்லாம் மூடி மறைக்க அதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக - பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை.
தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல. ஸ்டாலின் அல்ல - பதவியேற்றபோதே நான் ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல சொன்னேன் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் கலைஞருடைய மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன். அவ்வாறு உழைக்கின்ற அந்த உழைப்பிற்கு பொன்குமாரும் எனக்குத் துணை நிற்பார் என்று சொல்லி விடைபெறுகிறேன்” என்றார்.
