Thiruvalluvar: காவி உடையில் வள்ளுவர்!ஆளுநர் - முதல்வர் இடையே மீண்டும் வெடித்தது மோதல்
”RN Ravi vs MK Stalin: பாரதீய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்”
திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் அளிக்கும் வகையில் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று காலை தமிழ்நாடு ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்ட ’எக்ஸ்’ சமூகவலைத்தள பதிவில், ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் என பதிவிடப்பட்டு இருந்தது. இதில் காவி உடையிலும், விபூதி, குங்குமம் போன்ற மத சின்னங்களுடன் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ‘திருவள்ளுவர் தினத்தில், நமது தமிழ்நாட்டின் ஆன்மிக பூமியில் பிறந்த, மதிப்பிற்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதீய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசம் முழு மனித குலத்திற்கும் வழிகாட்டுதலாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது. இந்த புனித நாளில், அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ ஆளுநர் ரவி திருள்ளுவர் தின வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்திற்கான வாழ்த்து செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி!” என கூறி உள்ளார்.