MK Stalin vs EPS: டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்? - பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mk Stalin Vs Eps: டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்? - பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin vs EPS: டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்? - பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!

Karthikeyan S HT Tamil
Published Mar 25, 2025 01:04 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்? - பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!
டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்? - பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்த நிலையில், கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர். இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என்பது பணப் பிரச்சனை அல்ல, நம் இனப்பிரச்சனை. தடைக்கற்கள் உண்டென்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது என குறிப்பிட்டார்.

டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈ.பி.எஸ்.?

மேலும், அவர் பேசுகையில், "இருமொழி கொள்கைதான் அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டை வளர்த்து வந்துள்ளது. மாநிலங்களை தங்களின் கொத்தடிமை பகுதிகள் என நினைப்பதால்தான் மொழி திணிப்பை செய்கின்றனர். மும்மொழிக் கொள்கையை எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று விளக்கம் கொடுத்துள்ளோம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்துள்ளது. அப்படி யாரை சந்திக்கிறாரோ அவரிடம் இருமொழி கொள்கை குறித்து எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்". இவ்வாறு அவர் கூறினார்.

ஈபிஎஸ் டெல்லி பயணம்

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் இன்று மாலை முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கவுள்ளதாக பேசப்படும் நிலையில், ஈபிஎஸ்ஸின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.